செய்திகள்

தீராத குடிநீர் பஞ்சம் - தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் சாலை மறியல்

Published On 2019-05-11 10:49 GMT   |   Update On 2019-05-11 10:49 GMT
திண்டுக்கல் நகரில் குடிநீர் பஞ்சத்தை போக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மழையின்றி ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு வருவதால் காவிரி கூட்டு குடிநீர் தண்ணீரை மட்டும் நம்பி உள்ள நிலை உள்ளது.

அதிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 13 மற்றும் 14-வது வார்டு பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. இதனால் காலி குடங்களுடன் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை இப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் குடிநீர் பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து கொண்டே வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் திடீரென காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சாலையை மறித்து நீண்ட வரிசையில் குடங்களை அடுக்கி வைத்து நின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் யாரிடம் குறையை தெரிவிப்பது என தெரியவில்லை.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மாநகராட்சி பகுதியில் வாழ்வதற்கே உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த நகர் வடக்கு போலீசார் அவர்களை சமரசப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News