செய்திகள்
காசாவில் தாக்குதல் நடந்த பகுதி

ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் - போர்விமானங்கள் மூலம் காசாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்

Published On 2020-09-16 20:56 GMT   |   Update On 2020-09-16 20:56 GMT
காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை குண்டுகளை வீசியது.
ஜெருசலேம்:

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிழவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
 
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த மாதத்தில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிழவியது. காசா முனை பகுதியில் இருந்து வெடிக்கக்கூடிய எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்களை இஸ்ரேல் வான்வெளிக்குள் பறக்கவிட்டு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர். 

இரவு நேரங்களில் காசாவில் இருந்து பறக்கவிடப்படும் எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் இஸ்ரேல் நாட்டு மக்களின் வீடுகளில் விழுந்து தீவிபத்துக்களை ஏற்படுத்தி வந்தன. 

இந்த தாக்குதலில் பல வீடுகள் தீக்கிரையானது. மேலும், காசாவில் இருந்து பல ராக்கெட் தாக்குதல்களும் மீது ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது.   

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலாக காசா முனை பகுதி மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. 

இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலில் காசா பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது. கத்தார் மத்தியஸ்தம் மேற்கொண்டு இரு தரப்பும் சண்டையை நிறுத்த கடந்த 1-ம் தேதி ஒப்புக்கொண்டன. இதனால் பல நாட்களாக காசா பகுதிக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் இல்லாமல் சற்று அமைதி நிலவியது.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்-பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், காசா பகுதியை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தை கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. 

இதற்கிடையில், அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அ

மைதி ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்து காசா முனை பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகளால் நடத்திய ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலின் அஸ்டோட் நகரை குறிவைத்து ஏவப்பட்டுள்ளது. 

மொத்தம் 15 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. அவற்றில் 14 ராக்கெட்டுகளை இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதல் தடுப்பு அமைப்பு அழித்துள்ளது. ஆனால், ஒரு ராக்கெட் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்ததாகவும் அதில் 2 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலையடுத்து, காசா முனைப்பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. காசா முனையில் அமைந்துள்ள ஹமாஸ் போராளிகள் குழுக்களின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழைப்பொழிந்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்-பஹ்ரைன் இடையே கையெழுத்தாகியுள்ள அமைதி ஒப்பந்தத்தை சீர் குலைக்கும் விதமாகவே காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 1-ம் தேதி போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் இந்த மோதல் மூலம் முடிவுக்கு வந்துள்ளதால் தொடர்ந்து காசா முனை மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் சண்டை மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Tags:    

Similar News