ஆன்மிகம்
தியாகராஜர்

தியாகராஜரின் வாழ்க்கை வரலாறு

Published On 2021-02-01 09:04 GMT   |   Update On 2021-02-01 09:04 GMT
திருவையாறில் தான் தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்தார். ஒரு தவமுனிவரின் வாழ்க்கை முறைப்படி தினசரி உஞ்சவிருத்தி மூலம் ராமன் எனும் பரம்பொருளின் திருப்புகழைப்பாடிப்பணிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமசீலர் தியாகராஜர்.
திருவாரூரில் 1767-ம் ஆண்டு மே-4-ந் தேதி பிறந்தவர் தியாகராஜர். இவரது தந்தை ராமபிரம்மம், தாய் சீதம்மா, சகோதரர்கள்-பஞ்சாப கேசன், ராமநாதன். இளம் வயதிலேயே தந்தையிடம் ராமதாரக மந்திரமும் “ராமகிருஷ்ணானந்த யதீந்தரிடம் ராமாஷடாக்ஷரி மந்திரமும்” உபதேசம் பெற்றார்.

திருவையாறில் தான் தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்தார். ஒரு தவமுனிவரின் வாழ்க்கை முறைப்படி தினசரி உஞ்சவிருத்தி மூலம் ராமன் எனும் பரம்பொருளின் திருப்புகழைப்பாடிப்பணிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமசீலர் தியாகராஜர். சொண்டி வேங்கட ரமணய்யர் எனும் குருவிடம் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார் உண்ணும்சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் கண்ணனே! என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை அடியொற்றி எல்லாம் ராமனே! என்று பாடியவர் தியாகராஜர். இவர் பாடிய முதல் கீர்த்தனை “நமோ நமோ ராகவாய...” என்பதாகும்.

தன்னுடைய வாழ்நாளில் இரண்டு கோடி முறை ராம நாமத்தை உச்சரித்து, ராமனின் தரிசனம் காணும் பேறு பெற்ற தியாகராஜர் 1847-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தை மாதம் பகுள பஞ்சமி திதியில் ராமன் திருவடிகளை அடைந்து, முக்தி பெற்றார்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தியாகராஜரின் சமாதியில், பல ஆண்டுகள் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்திரபாகவதர் இருவரும் (தியாகராஜரின் சீடர்கள்) அவர் முக்தியடைந்த நாளில் ஆராதனை செய்தனர். பின்பு 1908-ம் ஆண்டு முதல் தில்லைஸ்தானம் ராம ஐயங்கார், தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் ஆண்டு தோறும் ஆராதனை நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டார். இதில் பெண்கள் பாட அனுமதிக்கப்படவில்லை.

திருவையாறு பள்ளி வளாகத்தில் இந்த ஆராதனை நடத்தப்பட்டது. தியாகராஜரின் சமாதியில் நினைவு மண்டபம் எழுப்பி, பிருந்தாவனம் அமைத்து அங்கேயே தியாகபிரம்ம ஆராதனை விழாவை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை அவரது பரம சிஷ்யை பெங்களூரு வித்யாரத்னம் நாகரத்தினம்மாவையே சாரும், நாதசுரவித்வான்கள் தனியே தியாகபிரம்ம ஆராதனை விழாவை நடத்தினர். மூன்று பிரிவினர் தனித்தனியே மூன்று இடங்களில் நடத்திய ஆராதனை விழாவை ஒருங்கிணைத்து தியாகராஜர் சமாதி முன்பாக ஒரே விழாவாக நடத்த நாகரத்தினம்மாள் பெருமுயற்சி செய்து, 1940 முதல் ஆராதனை விழாவை தியாகராஜர் சமாதி முன்பு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார்.

இதில் பெண்களும் கலந்து கொண்டு பாடுவதற்கு நாகரத்தினம்மாள் அனுமதித்தார். தனது சொத்துக்களை எல்லாம் தியாக பிரம்ம ஆராதனை விழாவிற்கே அர்ப்பணித்து தியாகராஜர் சமாதி எதிரிலேயே நாகரத்தினம்மாளும் சமாதியடைந்தார்.

பெங்களூரு நாகரத்தினம்மாள் ஏற்படுத்திய அறக் கட்டளை நிதியுதவியுடன் முசிறி சுப்ரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஆலத்தூர் சிவசுப்ரமணிய ஐயர், வெங்கடேச ஐயர், சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, திருவாலங்காடு சுந்தரேசய்யர் திருவீழிமிழலை சகோதரர்கள் போன்ற மகா வித்வான்கள் சேர்ந்து, தியாகபிரம்ம மகோத்சவ சபை என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.

இந்த சபைதான் ஆண்டுதோறும் தியாகபிரம்ம ஆராதனை விழாவை சிறப்பாக நடத்துகின்றது. மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் தியாகபிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக 35 ஆண்டுகள் அரும் பணியாற்றி, ஆராதனை விழாவைத் தேசிய அளவில் அகில இந்திய விழாவாக விளங்கச்செய்தார். அவருக்குப் பின் அவரது சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் தலைவராகப் பொறுப்பேற்று ஆராதனை விழாவை சிறப்பாக நடத்தி வந்தார். மூப்பனார் மறைவுக்குபிறகு ஜி.கே.வாசன் புதிய தலைவராக பொறுப்பேற்று 174-வது ஆரா தனை விழாவை நடத்து கிறார். அமரர்மூத்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா வும், அமரர் சீர்காழி கோவிந்தராஜனும் பல ஆண்டுகள் சபையின் செயலாளர்களாக அரும்பணியாற்றினர். வயலின் மாமன்னர் அமரர் குன்னக்குடி வைத்யநாதன் 27 ஆண்டுகள் சபையின் செயலாளராக இருந்தார். தற்போது தவில் மேதை அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல், மிருதங்க மேதை ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் ஆகியோர் செயலாளர்களாகவும், குடந்தை கணேஷ் சபையின் பொருளாளராகவும் பணியாற்றுகின்றனர். அகில இந்திய அளவில், எல்லா இசைக் கலைஞர்களும் ஒன்று சேர்த்து பங்குபெறும் முதன்மையான இசை விழா தியாகராஜர் ஆராதனை விழாவாகும்.

174-வது ஆராதனை விழா இன்று (திங்கட்்கிழைம) தொடங்குகிறது.
Tags:    

Similar News