செய்திகள்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கருங்கல்பட்டியில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்- 5 பேர் உயிரிழப்பு

Published On 2021-11-23 08:29 GMT   |   Update On 2021-11-23 10:40 GMT
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
சேலம்:

சேலம் குகை பகுதியில் உள்ள கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு ஒரு வீட்டின் சுவர் மீது மற்றொரு வீட்டின் சுவர் தொட்டப்படி சிறிய வீடுகள் முதல் அடுக்குமாடி வீடுகள் வரை கட்டப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருபவர் பத்மநாபன் (வயது 41). இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவி (38). இவர்களது மகன் லோகேஷ். இவர்கள் அடுக்குமாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பத்மநாபன் வீட்டை தொட்டப்படி வெங்கட்ராமன் (62) என்பவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளது. வெங்கட்ராமன் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். இதில் குகை பகுதியில் கடை வைத்து நூல் ஏற்றுமதி செய்து வரும் ஜவுளி வியாபாரி கணேசன்- மகாலட்சுமி தம்பதி, முருகன்- உஷாராணி தம்பதி மற்றும் பாண்டுரங்கன் கோவில் தெருவில் பலகார கடை நடத்தி வரும் கோபி ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இன்று காலை கோபி வீட்டில் அவரது உறவினர் ராஜலட்சுமி (80) சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. இதை கவனிக்காமல் ராஜலட்சுமி தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் அடுப்பில் பற்றிய தீ கியாஸ் சிலிண்டரில் பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் கோபி வீடு மற்றும் பத்மநாபனுடைய அடுக்குமாடி வீடும் இடிந்து விழுந்தது. மேலும் வீட்டில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பக்கத்தில் இருந்த கணசேன், முருகன் வீடுகளில் பரவியது. இதில் வீடுகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒன்றன் மீது ஒன்றாக இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த இந்த 4 வீடுகளின் சிலாப்கள், பீம்கள், சுவர்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழுந்து கிடந்தன. இந்த இடிபாடுகளுக்குள் கோபி, பத்மநாபன், கணேசன், முருகன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிக்கினர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

வீடுகளின் கற்கள் விழுந்து பசு மாடு பால் வழங்க வந்த பால்காரர், எதிர்வீட்டில் முன் பக்கம் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபியின் உறவினர் ராஜலட்சுமி தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags:    

Similar News