லைஃப்ஸ்டைல்
பேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

பேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

Published On 2021-01-18 03:27 GMT   |   Update On 2021-01-18 03:27 GMT
பேர குழந்தைகளின் மீது அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தாத்தா-பாட்டிகள் தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.
தாத்தா, பாட்டிகளின் அருகாமை தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அந்த பழைய தலைமுறையினரின் பாதுகாப்பும், பராமரிப்பும் தங்களுக்கு அவசியம் என்பதை குழந்தைகளும் புரிந்துகொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். தாத்தா-பாட்டிகள் குழந்தைகளை வழிநடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சில குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றவும், திசைதிருப்பவும் தங்கள் தாத்தா-பாட்டிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

‘நான் விளையாடச் சென்றதையோ, கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிட்டதையோ அப்பா, அம்மாவிடம் சொல்லக்கூடாது. சொன்னால் நான் உங்கள் இருவரிடமும் பேசவே மாட்டேன்’ என்று உணர்ச்சிபூர்வமாக மிரட்டவும் செய்கிறார்கள். அதற்கெல்லாம் தாத்தா-பாட்டிகள் செவிசாய்த்துவிடக்கூடாது. அவர்கள் அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.

பேரன்-பேத்திகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய அணுகுமுறைகள்:

முதுமையடைந்துவிடும் தாத்தா-பாட்டிகள் மீண்டும் இளமைக்கு திரும்ப பேரன்-பேத்திகள் காரணமாக இருப்பார்கள். அவர்களோடு பொழுதுபோக்குவது, விளையாடுவது, வெளி இடங்களுக்கு செல்வது போன்றவை முதியோர்களை மனதளவில் இளமைக்கு திரும்ப வழிவகை செய்யும். குழந்தைகளுக்குதக்கபடி அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, அவர்களிடம் நண்பர்கள் போன்று பழக முன்வரவேண்டும். பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைகூட தாத்தா பாட்டியிடம் சொல்லலாம் என்ற எண்ணம் வரும் அளவுக்கு குழந்தைகளிடம் நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளாக இருக்கும்போது மட்டுமல்ல, அவர்கள் பெரியவர்களான பின்பும் அத்தகைய சிறந்த உறவை மேற்கொள்ளும் அளவுக்கு தாத்தா- பாட்டிகள் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழவேண்டும்.

தாத்தா-பாட்டிகளுக்கு பழைய கால அனுபவங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்ந்தகாலம் வேறு. அதனால் அவர்களது அனுபவங்கள் மட்டுமே சிறந்தது என்று கருதாமல் தாத்தா-பாட்டிகள் காலத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வது மிக அவசியம். காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் தக்கபடி அவர்கள் மாறினால் மட்டுமே பேரன்-பேத்திகளுடனான உறவை சிறப்பாக பேணமுடியும். இன்றைய கால மாற்றத்தையும், இன்று குழந்தைகள் வளர்ந்துவரும் சூழ்நிலைகளையும் முதியோர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் மகன், மகள்களை வளர்த்த சூழ்நிலை வேறு. தனது பிள்ளைகளை கட்டுப்படுத்தி வளர்த்ததுபோல், தனது பேரன் பேத்திகளை கட்டுப்படுத்தி வளர்க்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தேவையான சுதந்திரத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவர்-சிறுமியர்களிடம் இணக்கமாக செயல்படமுடியும். சிறுவர்- சிறுமியர்களை புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும்.

மனித சுபாவங்கள் வித்தியாசமானவை. சில தம்பதிகள் தாங்கள் பெற்றோராக இருந்த காலகட்டத்தில் குழந்தைகளை கவனிக்காமல் எப்போதும் வேலை வேலை என்று சுழன்றிருப்பார்கள். அதனால் ‘குழந்தைகளோடு இருந்து அவர்களை வளர்த்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே’ என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். அந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகிவிட்ட நிலையில் தாத்தா பாட்டியாகும் அவர்கள், பழைய குறைகளை போக்கும் விதத்தில் பேரன் பேத்திகளை அருகில் இருந்து வளர்த்து, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறிய அன்பை வெளிப்படுத்தி பேரன் பேத்திகளை சோம்பேறிகளாகவோ, பொறுப்பற்றவர்களாகவோ வளர்த்துவிடக்கூடாது. அதுபோல் தனது குழந்தைகளை அதிக கண்டிப்புடன் வளர்த்த பெற்றோரும் தனது பேரக்குழந்தைகளுக்கு அதிக அன்பை கொடுத்து வளர்க்க விரும்புகிறார்கள். அது நல்ல பழக்கம் இல்லை. அன்புக்கும் அளவுகோல் அவசியம். குழந்தைகளுக்கு அன்பும் சுதந்திரமும் கொடுத்து வளர்ப்பதுபோல், அவசியம் ஏற்படும்போது தவறுகளை சுட்டிக்காட்டி லேசான தண்டனைகளை கொடுத்தும் திருத்தவேண்டும்.

சிலர் ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் பிற்காலத்தில் தாத்தா பாட்டியானதும் அதே கட்டுப்பாடுகளை தங்கள் பேரன் பேத்திகளிடமும் திணிக்கப்பார்ப்பார்கள். அதில் அடக்குமுறையும், கட்டுப்பாடும் மட்டுமே இருக்கும். அன்பு இருக்காது. இப்படி வளர்க்கப்படுபவர்களிடம் குழந்தைப் பருவத்தில் பெரிய பிரச்சினை எதுவும் தோன்றாது. ஆனால் அவர்கள் இளமைப் பருவத்தை எட்டும்போது மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். மற்றவர்களிடம் அவர்களால் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வார்கள். வன்முறை குணமும் உருவாகலாம். ராணுவ கட்டுப்பாடு போன்ற முறைகளில் வளர்ந்த முதியோர்கள் தனது அடுத்தடுத்த தலைமுறையும் அதுபோல் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. காலத்திற்கு ஏற்றபடி முதியோர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்தும் விதத்தில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வருவார்கள். அப்போது அந்த குழந்தைகள் தாத்தா-பாட்டியின் பின்னால் போய் ஒளிந்துகொள்ளும். அந்த தருணத்தில் முதியோர்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகப் பேசினால், அவர்கள் செய்யும் தவறுக்கு ஆதரவளித்ததுபோல் ஆகிவிடும். சில முதியோர்கள் ஒரு படி மேலே சென்று, ‘உன் மகன் செய்த இந்த தவறுக்கே இப்படி குதிக்கிறாயே. இதைவிட எத்தனையோ பெரிய தவறுகளை எல்லாம் நீ செய்திருக்கிறாயே..!’ என்று கூறி வக்கலாத்து வாங்கி, குழந்தை செய்ய தவறுகளை நியாயப்படுத்தி, மகனையே மட்டம்தட்டிவிடுவார்கள். இது தவிர்க்கப்படவேண்டியது. இப்படிப்பட்ட தாத்தா பாட்டிகளால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அந்த குடும்பத்தின் கட்டுறுதியும் சிதைக்கப்பட்டுவிடும்.

நவீன காலத்திற்கு ஏற்றபடி தாத்தா-பாட்டிகள் தங்கள் விஞ்ஞான அறிவையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். சமூக வலைத்தள செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவைகளை பற்றிய அறிவை ஓரளவாவது தாத்தா பாட்டிகள் பெற்றிருக்கவேண்டும். பெற்றிருந்தால் மட்டுமே இந்த காலத்து குழந்தைகளை அவர்களால் பாதுகாக்கவும், பராமரிக்கவும் முடியும்.
Tags:    

Similar News