செய்திகள்
கே.எஸ்.அழகிரி

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published On 2019-11-24 05:59 GMT   |   Update On 2019-11-24 05:59 GMT
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி:

இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு காரணமான மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துவிட்டது. அன்னிய முதலீடும் சரிந்துவிட்டது. இதை உலக பொருளாதார நிபுணர்களும், இந்திய பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள். புதிய தொழிற்சாலைகள் இல்லை. விவசாயம் மங்கிவிட்டது. வேலையின்மை அதிகரித்து விட்டது. பிரதமர் மோடியின் அரசு படுபாதாளத்தை நோக்கி சென்றுவிட்டது.

தன் தவறுகளை மறைக்க பா.ஜனதா காஷ்மீர் பிரச்சனை, அயோத்தி பிரச்சனை என திசை திருப்பி வருகிறது. இப்போது மகாராஷ்டிராவில் சரத்பவாரின் கட்சியையும், குடும்பத்தையும் உடைத்து கொல்லைப்புறம் வழியாக வந்து ஆட்சி அமைத்து உள்ளது. இது ராஜதந்திரம் என்பதை விட பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம், பா. ஜனதாவின் ஏமாற்று வேலை.

பா.ஜனதாவை போன்று தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வும் சர்வாதிகாரத்தை கடைப்பிடிக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை கொண்டு வருகிறது. அ.தி.மு.க என்ற முகமூடியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் பிற்போக்கான வி‌ஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவர்களால் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை, இங்கு கொண்டுவரமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் பேசும்போது, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி இசைக்கும் டியூனுக்கு நடனம் ஆடுகிறார்கள். விரைவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.
Tags:    

Similar News