செய்திகள்
ஊட்டி படகு இல்லத்தில் சோதனை ஓட்டத்துக்காக புதிய படகுகள் இயக்கப்பட்டதை காணலாம்

ஊட்டியில் புதிய படகுகள் சோதனை ஓட்டம்- அனுமதி கிடைத்தவுடன் இயக்க நடவடிக்கை

Published On 2021-01-11 04:07 GMT   |   Update On 2021-01-11 04:07 GMT
ஊட்டி படகு இல்லத்தில் புதிய படகுகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அனுமதி கிடைத்த உடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு இயக்கப்படுகிறது. இயற்கை அழகை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார் கள். ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி படகுகளை சீரமைப்பது, வர்ணம் தீட்டுவது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இதற்கிடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக 26 படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதில் டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களை தத்ரூபமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி படகுகள் வந்து உள்ளன. மேலும் கைப்பிடியுடன் கூடிய துடுப்பு படகுகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக புது படகுகளை இயக்க அனுமதி இல்லாததால் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சென்னை சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் புதிய படகுகளின் தரத்தை ஆய்வு செய்து இயக்க சோதனை ஓட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி ஊட்டி படகு இல்லத்தில் நேற்று சில புதிய படகுகள் சோதனை ஓட்டத்துக்காக இயக்கப்பட்டது. புதிய படகுகளில் சுற்றுலா பயணிகள் உயிர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சவாரி செய்தனர். 2 இருக்கைகள், 4 இருக்கைகளை கொண்ட படகுகள் தண்ணீரில் சமநிலை யில் செல்கிறதா, மிதிக்கும் போது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. எளிதில் திரும்புகிறதா என்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக புதிய படகுகளில் தண்ணீர் நிரப்பி எடை சரிபார்க்கப்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது கற்றுலா பயணிகளின் டிராகன், மயில் படகுகளில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய படகுகளை இயக்க அனுமதி கிடைத்ததும் அனைத்து படகுகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.
Tags:    

Similar News