செய்திகள்
ஓட்டுப்பெட்டி

பொழிச்சலூர், கவுல் பஜார், திரிசூலம்- ஓட்டு எண்ணும் பணி தாமதம்

Published On 2021-10-12 09:19 GMT   |   Update On 2021-10-12 09:19 GMT
திரிசூலம், கவுல் பஜார், மேடவாக்கம் உள்ளிட்ட மற்ற பஞ்சாயத்து ஓட்டுகள் எண்ணும் பணி மதியம் வரை தொடங்கப்படவில்லை.
சென்னை:

சென்னையை சுற்றியுள்ள பொழிச்சலூர், கவுல் பஜார், திரிசூலம், மேடவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட 15 பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய பரங்கிமலை ஒன்றியத்துக்கான வாக்குகள் தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த மையத்தில் முதலில் பொழிச்சலூர் பஞ்சாயத்துக்கான ஓட்டு பெட்டிகள் பிரிக்கப்பட்டு 50, 50 கட்டுகளாக கட்டப்பட்டது. அப்போது பதிவான ஓட்டுக்கும், கட்டப்பட்ட ஓட்டு சீட்டுகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டது. பதிவேட்டில் எழுதப்பட்ட எண்ணிக்கைக்கும், கையில் இருந்த ஓட்டு சீட்டுக்கும் இடையே 4 ஓட்டு குறைவாக வந்ததால் என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கினர்.

இதனால் 12 மணிவரை ஓட்டும் எண்ணும் மேஜைக்கு ஓட்டுசீட்டுகள் வந்து சேரவில்லை. கட்சி ஏஜெண்டுகளும், வேட்பாளர்களும் பல மணிநேரமாக காத்திருந்தனர். இதன் காரணமாக திரிசூலம், கவுல் பஜார், மேடவாக்கம் உள்ளிட்ட மற்ற பஞ்சாயத்து ஓட்டுகள் எண்ணும் பணி மதியம் வரை தொடங்கப்படவில்லை.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலில் 4 ஓட்டுகள் போட வேண்டியது உள்ளதால் விவரம் தெரியாத சிலர் 3 ஓட்டுகளை மட்டும் பெட்டியில் போட்டுவிட்டு ஒரு ஓட்டை கையில் எடுத்து வந்து விடுகிறார்கள். மேலும் சிலர் ஒரு ஓட்டு சீட்டில் 4 முத்திரைகளை பதித்துவிட்டு மற்ற ஓட்டு சீட்டை போடாமல் வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுபோன்ற குளறுபடிகளால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகிறது. எண்ணிக்கையில் வித்தியாசம் வரும் ஓட்டு சீட்டை கடைசியில் முடிவு செய்துகொள்ளலாம் என்ற அடிப்படையில் வாக்குகளை எண்ண சம்மதம் தெரிவித்துள்ளோம். அதன் அடிப்படையில் மிக தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது’’ என்றார்.


Tags:    

Similar News