ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேர் திருவிழா இன்று தொடக்கம்

Published On 2020-08-13 08:58 GMT   |   Update On 2020-08-13 08:58 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் கோவில் வளாகத்துக்குள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
கொரானோ வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் காரணமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து நடை சாத்தப்பட்டு உள்ளது. அதேநேரம் கோவிலில் நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பங்குனி தேர் திருவிழா (ஆதிபிரம்மா திருநாள்), சித்திரைத் தேர் திருவிழா (விருப்பன் திருவிழா), பெருமாள், தாயார் கோடை திருநாட்கள் மற்றும் பெருமாள், தாயார் வசந்த திருநாள் விழாக்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான பரிகார ஹோமங்களான மஹா சாந்தி ஹோமம் மற்றும் சகஸ்ர கலசாபிஷேக பூஜை நடைபெற்றது.ஹ

இதைத்தொடர்ந்து மீண்டும் அங்குரார்ப்பணம் தொடங்கி விட்டுப்போன பிரம்மோற்சவங்கள் நடத்த வேண்டும் என்று ஆகமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்ட பங்குனி தேர் திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் கோவில் வளாகத்துக்குள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இன்று கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின்னர் சிறப்பு பூஜைகளுடன் காலை 4.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு கருட மண்டபம் சென்றடைகிறார்.

விழாவின் 2 மற்றும் 3-ம் நாட்களில் கருடமண்டபத்தில் மாலை 4.30 மணியளவில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். 4-ம் நாளான 16-ந்தேதி நம்பெருமாள் தங்க கருடவாகனத்திலும், 17-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி மாலை 5 மணிக்கு உறையூர் தாயார் மற்றும் வெளிஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

19-ந்தேதி இரவு 9.30 மணிக்கு தாயார் சன்னதியில் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். 20-ந்தேதி மாலை 6 மணிக்கு நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 21-ந்தேதி காலை 10.15 மணிமுதல் மதியம் 1 மணிவரை நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. சேர்த்தி சேவைக்கு பின் நம்பெருமாள் கோரதத்தில் (தேரில்) எழுந்தருளுவது வழக்கம். ஆனால் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் கோரதத்திற்கு பதிலாக இரவு 8 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News