லைஃப்ஸ்டைல்
மாணவர்களே ஆசிரியர்களை போற்றுவோம்

மாணவர்களே ஆசிரியர்களை போற்றுவோம்

Published On 2020-03-17 05:17 GMT   |   Update On 2020-03-17 05:17 GMT
சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்கு படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரை பற்றிய நினைவு கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும்.
‘உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்’

செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பி பணிந்து கற்றவரே, உயர்ந்தவர், அப்படி நின்று கற்க வெட்கப்பட்டு கல்லாதவர் இழிந்தவரே என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அந்த கல்வியை நமக்கு இனிமையாகவும், அன்பாகவும், பண்பாகவும் சிறிது கண்டிப்புடனும் கற்று தருபவர்கள் நமது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் எவ்வளவு கற்றாலும், தன்னைத்தானே தாம் எவ்விதத்திலும் பெரியர் என்ற பெருமைக்கு உட்படாமல் மேலும், மேலும் தனது அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதை தான் மட்டும் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைத்து அதை அவர்கள் தங்களின் மாணவர்களுக்கும் கற்று கொடுக்கிறார்கள்.

ஆசிரியர் சிறந்த நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும், நேர்மையும் உடையவர்கள். கல்வியை மட்டும் கற்று கொடுத்து விட்டு நம் வேலை முடிந்தது என்று நினைப்பவர்கள் அல்லர். கல்வியுடன் சேர்த்து நல்ல பழக்க வழக்கங்களையும், சிறந்த பண்புகளையும், ஒழுக்கத்தையும், நேர்மை அல்லது உண்மையாக நடந்து கொள்வது, மேலும் அறிவையும் சேர்த்தே நமக்கு ஊட்டுகிறார்கள். ஏன் பொறுமைக்கும் உதாரணமாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட எல்லாவற்றையும் கற்று தருகின்ற ஆசிரியர்களை நாம் எவ்வாறெல்லாம் மதிக்க வேண்டும். பொறாமை என்ற குணம் அவர்களிடம் அறவே இருக்காது.

எல்லாவிதமான மாணவர்களையும் சமமாக நினைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியாக கல்வி மற்றும் அறிவையும் கொடுக்கிறார்கள். என்றாவது ஒரு நாள், அவர்கள் நம்மை, என் மாணவன் இப்பதவியில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் போது, அவர்களும் நம் பெற்றோரை போல் அளவு கடந்த மகிழ்ச்சியை அடைவார்கள். அப்போதும் அவர்கள் தன் இடத்தை விட்டு மாறாமல் அதே ஆசிரிய பணியிலே தான் சிறந்து விளங்குவார்.

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறக்க விரும்புகின்றேன்
அத்தனை பிறப்பிலும் ஆசான் பணியை
ஏற்றிட விரும்புகிறேன்

என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஆசிரியர்கள் அவர்களின் பணியை விரும்புகிறார்கள். அடக்கத்தை உறுதி பொருளாக கொண்டு விளங்குபவர்கள் அவர்களே! அவர்கள் எவ்வளவு தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டாலும் அடக்கத்துடனும் பணிவுடனுமே நடந்து கொள்வார்கள். கற்பதையே நாம் கடினம் என்று நினைக்கும் போது ஆசிரியர்கள் நமக்கு கற்பிக்க வரும் முன்னர் அவர்கள் எவ்வளவு அதிகமாக கற்று கொண்டு வந்து மாணவர்களாகிய நமக்கு கல்வியையும், அறிவையும் புகட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை”

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும். இதற்கு முழு எடுத்துக் காட்டாக நாம் நமக்கு கல்வியை புகட்டும் ஆசிரியர்களையே சொல்ல முடியும். அவர்கள் தன்னைத் தானே ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் இருப்பதோடு தங்களின் மாணவர்களையும் எல்லா விதத்திலும் ஊக்கப்படுத்துவார்கள். அவர்கள் எந்த நேரமும் புத்துணர்ச்சியுடனும் மாணவர்களுக்கு அறிவை புகட்டும் விதத்திலும் எந்தவித மாற்றமும் இன்றி நடந்து கொள்வார்கள்.

விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், ஆசிரிய பணியை அதிகம் நேசித்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவரது கடைசி பேச்சையும் மூச்சையும் அறிவை புகட்டும் ஆசானாகவே 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கழக மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே தனது உயிரை துறந்தார்.

சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்கு படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரை பற்றிய நினைவு கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும். நாம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 5, மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆகும். மாணவர்களாகிய நம்மை முன்னேற்ற பாதையில் ஏற்றி விட்டு அவர்கள் கீழே நிற்கிறார்கள். அவர்களை மாணவர்களாகிய நாம் போற்றுவோம்!

அ.குலூத் நிஹார்,

முதலாமாண்டு இயற்பியல் துறை,

பாபுஜி நினைவு கல்வியியல்

கல்லூரி, மணவாளக்குறிச்சி
Tags:    

Similar News