செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்- செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2019-11-15 10:33 GMT   |   Update On 2019-11-15 10:33 GMT
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றியை பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்றும், நாளையும் விருப்ப மனு வழங்கப்பட்டு பெறப்படுகிறது.

மறைந்த முதல்வர் அம்மா காலத்தில் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் எப்படி உற்சாகமாக இருந்தார்களோ அதே போல் இப்போதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சியினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்கள் எழுச்சியுடன் திரண்டு வந்து விருப்ப மனுக்களை பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆர்வம் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும்.

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் நிர்வாக ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமாக நடவடிக்கை தான். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் அ.தி.மு.க. அரசை குறை கூறி வருகிறார்.

கோபத்தின் உச்சகட்டத்திக்கு சென்றுள்ள அவர், இந்த ஆட்சி மீது தேவையற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை ரஜினி நிரப்புவார் எனவும், மு.க. அழகிரி கூறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமை உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. அரசியல் வெற்றிடம் எதுவும் இல்லை.

அ.தி.மு.க. மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி ஆண், பெண் பிரதிநிநித்துவம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் உள்ளாட்சி தேர்தலிலும் இணைந்து போட்டியிடுமா? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. விரும்புகிறது. ஆனால் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தியபின்னர் மதுரையில் மேயர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும்.

எப்படி இருந்தாலும் மதுரை அ.தி.மு.க. கோட்டை தான். இங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எனவே 100 சதவீத வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News