செய்திகள்
கோப்புப்படம்

அணு ஆலை வெடி விபத்து : இஸ்ரேலின் பயங்கரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு

Published On 2021-04-13 00:51 GMT   |   Update On 2021-04-13 00:51 GMT
ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.
டெஹ்ரான்:

ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.

இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.‌ அதே சமயம் இந்த விபத்தில் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும், ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஈரான் அரசு கூறியது.

இந்த நிலையில் நாதன்ஸ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து பயங்கரவாத சாதிச் செயல் என்றும், இஸ்ரேலே இதற்கு காரணம் என்றும் ஈரான் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சாயீப் காதிப்சாதே இதுகுறித்து கூறுகையில், “நாதன்ஸ் அணு உலை விபத்து, பயங்கரவாத சதிச்செயலின் விளைவு ஆகும். இது ஈரானிய மண்ணில் அணு பயங்கரவாதத்தின் செயல் ஆகும். சமீபத்திய இந்த தாக்குதலுக்கு சரியான நேரத்தில் இஸ்ரேலிய அரசை ஈரான் பழிவாங்கும்‌. இஸ்ரேல் அதன் சொந்த பாதையின் மூலம் இதற்கான பதிலை பெறும்” என கூறினார்.

இதுபற்றி ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷாரீப் கூறுகையில், “நாதன்ஸ் அணு ஆலை மேம்பட்ட எந்திரங்களுடன் புனரமைக்கப்படும். பொருளாதார தடைகளை நீக்கும் பாதையில் ஈரான் வெற்றி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத இஸ்ரேலியர்கள் ஈரானிய மக்களை பழிதீர்க்க விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்.‌ அதேவேளையில் ஈரானின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு நாங்கள் பழிவாங்குவோம்” என்றார்.
Tags:    

Similar News