ஆன்மிகம்
பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வருவதை படத்தில் காணலாம்.

குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்

Published On 2020-02-18 06:11 GMT   |   Update On 2020-02-18 06:11 GMT
குழந்தை வேலப்பர் கோவில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் குழந்தைவேலப்பர், வள்ளி-தெய்வானையுடன் ரத வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் பவனி வந்தார்.
கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. இது, பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான இந்த கோவிலில் தேரோட்ட திருவிழா, கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் சேவல், அன்னம், மயில், காளை, ஆட்டுக்கிடா, பூதம், சிங்கம், யானை ஆகிய வாகனங்களில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் குழந்தைவேலப்பர், வள்ளி-தெய்வானையுடன் ரத வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் பவனி வந்தார். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது. முன்னதாக தேரின் முன்பு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் மற்றும் குழந்தைகள் ரதவீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பழனி முருகன் கோவில் அதிகாரிகள், கொடைக்கானல் நகர், பூம்பாறை மற்றும் பல்வேறு மலைக்கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர். இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பூம்பாறை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News