செய்திகள்
ப.சிதம்பரம்

எல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்

Published On 2020-11-19 07:11 GMT   |   Update On 2020-11-19 07:11 GMT
எல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி மயிரிழையில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மிகக் குறைவான இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றதால்தான் ஆட்சிக்கு வர முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் இது சம்பந்தமாக கட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடினார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

பீகாரில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு 70 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டதே தவறு. அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.

ராஷ்ட்ரீய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கும் நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்து இருக்கிறோம்.

பா.ஜனதா அல்லது அதன் கூட்டணி கட்சிதொடர்ந்து 20 ஆண்டுகள் வெற்றி பெற்ற 25 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அந்த தொகுதிகளை ஏற்றிருக்கக் கூடாது. காங்கிரசின் நிலையை கருதி 45 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு இருக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டது தவறு. பீகாரில் மட்டுமல்ல குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் மோசமாக தோற்றுள்ளது.

இது எல்லா மாநிலங்களிலும் கட்சி அடிப்படை ரீதியாக பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. பீகாரில் கம்யூனிஸ்டு கட்சிகள் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கின்றன.

அவர்கள் அடிப்படை ரீதியாகவும், அடிமட்ட அளவிலும் வலுவாக இருந்ததால் தான் அந்த வெற்றி கிடைத்திருக்கிறது. காங்கிரசின் பலவீனத்தை குறித்து மறு ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Tags:    

Similar News