செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்களுடன், காணொலி காட்சி மூலம் எடியூரப்பா கலந்துரையாடியதை படத்தில் காணலாம்.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: எடியூரப்பா வேண்டுகோள்

Published On 2021-06-10 03:07 GMT   |   Update On 2021-06-10 03:07 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் களத்தில் அங்கன்வாடி ஊழியர்களான நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சேவையாற்றி வருகின்றீர்கள்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா காணொலி மூலமாக கலந்துரையாடல் நடத்தி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

டாக்டர்கள், செவிலியர்கள், ஆஷா ஊழியர்களுடன் எடியூரப்பா கலந்துரையாடினார். இந்த நிலையில்
எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் அங்கன்வாடி ஊழியர்களுடன் எடியூரப்பா கலந்துரையாடினார். அப்போது எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் களத்தில் அங்கன்வாடி ஊழியர்களான நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் சேவையாற்றி வருகின்றீர்கள். கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் உங்களின் பங்கு முக்கியமானது.

கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும். இந்த நிலையில் குழந்தைகளின் உடல்நிலையை காப்பதில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

அவர்களின் உடல்நிலையை காக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும். நீங்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவது மற்றும் கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது. நீங்கள் முன்கள பணியாளர்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
கொரோனா
பாதிப்பு ஏற்பட்டு உங்களில் யாராவது இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

கொரோனா முதல் அலையின்போது கொரோனாவால் இறந்த 20 அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு உதவி தொகுப்பு திட்டத்தில் தலா ரூ.2 ஆயிரம் அறிவித்துள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த கலந்துரையாடலின்போது, அங்கன்வாடி ஊழியர்கள் பேசுகையில், "நாங்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குகிறோம். கொரோனா அறிகுறி உள்ளவர்களை அடையாளம் கண்டு பரிசோதனைக்கு அழைத்து செல்கிறோம். தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

பொதுமக்களிடம் பயம் போய்விட்டது. விதிமுறைகளை மதிக்காமல் வெளியில் நடமாடுகிறார்கள். கொரோனா பாதிப்பு உறுதியானவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து சென்று அனுமதிக்கிறோம். வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு உரிய மருந்து-மாத்திரைகளை வழங்கும் பணிகளை மேற்கொள்கிறோம்" என்றனர்.

பெலகாவியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் மஞ்சுளாவின் சிறப்பான சேவையால் கவரப்பட்ட முதல்-மந்திரி எடியூரப்பா, தனது வீட்டிற்கு காபி பருக வரும்படி அழைப்பு விடுத்தார். இதை கேட்டு அந்த ஊழியர் நெகிழ்ந்து போனார்.
Tags:    

Similar News