செய்திகள்
கைது

திருச்சியில் தனியார் மருத்துவமனை டாக்டர் மீது தாக்குதல்- 4 பேர் கைது

Published On 2020-11-21 13:51 GMT   |   Update On 2020-11-21 13:51 GMT
திருச்சியில் தனியார் மருத்துவமனை டாக்டரை தாக்கியதாக கட்டிட பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் டாக்டர் கே.ராஜேந்திரன் (வயது 55). அறுவை சிகிச்சை நிபுணரான இவர், திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

டாக்டர் ராஜேந்திரனுக்கும், கட்டுமான பணியில் தொடர்புடைய சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் டாக்டர் ராஜேந்திரன் புகார் கொடுத்திருந்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தில்லை நகர் 5-வது குறுக்குத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி விட்டு, மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் டாக்டர் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், டாக்டரை அவதூறாக பேசியதுடன் போலீசில் புகார் கொடுக்கிறீயா? எனக்கூறி இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் டாக்டர் ராஜேந்திரனுக்கு கண் புருவம், மூக்கு மற்றும் வாயிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் டாக்டரை தாக்கியது திருச்சி பிராமினண்ட் ரோட்டை சேர்ந்த கட்டிட பொறியாளரான கைலாசம் (60) , தில்லை நகர் சாஸ்திரி ரோட்டை சேர்ந்த சரவணன் (30) , தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதுகூர் அதாலக்கோட்டையை சேர்ந்த ஞானசம்பந்தம் (56) மற்றும் கார் டிரைவர் ஒருவர் என்பது தெரியவந்தது. கட்டிடம் கட்டித்தருவது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் டாக்டர் தாக்கப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்று கட்டிட பொறியாளர் கைலாசம் உள்ளிட்ட 4 பேர் மீதும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News