செய்திகள்
மனைவி சில்பா ஷெட்டியுடன் ராஜ் குந்த்ரா

ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்தது எப்படி?

Published On 2021-07-29 02:17 GMT   |   Update On 2021-07-29 02:17 GMT
சபலமனம் கொண்ட ஏராளமானோரை ஆபாச வலைத்தளத்துக்குள் இழுத்து பிரபல நடிகையின் கணவர் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த வழக்கு விஸ்வரூபம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை :

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா(வயது45), கடந்த 19-ந் தேதி மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் ஆபாச பட வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆபாச படங்களை தயாரித்து, செல்போன் செயலிகளில் வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் போலீசாரின் வலையில் சிக்கி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சில பெண்கள், தங்களை வெப் தொடரில் நடிக்க அழைத்து ஆபாச படத்தில் நடிக்க வைத்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் சிலரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தி வந்த தீவிர விசாரணையில் தான் தற்போது இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளியாக சிக்கி உள்ளார். போலீசாரின் 9 நாள் விசாரணைக்கு பிறகு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நேற்று முன்தினம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஜாமீன்கேட்டு ராஜ்குந்த்ரா மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்து செல்போன் செயலியில் வெளியிட்டதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்து இருப்பதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர். மேலும் அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 51 ஆபாசபட வீடியோக்களை கைப்பற்றி இருப்பதாகவும், அதில் 35 வீடியோக்கள் ‘ஹாட்ஷாட்ஸ்’ லோகோவுடனும், 16 வீடியோக்கள் பாலிபேம் லோகோவுடனும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ராஜ்குந்த்ரா லண்டனை சேர்ந்த கென்ரின் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் ஆர்ம்ஸ்பிரைம் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் இந்த நிறுவனம் மூலம் ‘ஹாட்ஷாட்ஸ்’ செயலியை வாங்கி சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற ஆதாரங்களை போலீசார் தெரிவித்ததை அடுத்து, ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

ஆபாச பட வழக்கில் இதுவரை ராஜ்குந்த்ரா உள்பட 11 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி கலந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜ்குந்த்ரா தலைமையில் செயல்பட்ட இந்த குழுவினர், சினிமா மோகத்தில் உள்ள பல பெண்களை நைசாக அணுகி வெப் தொடர், குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்துள்ளனர். திகில் உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி பின்னர் அரை நிர்வாணம், முழு நிர்வாண காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர்.

நடிக்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் படப்பிடிப்புக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு உள்ளது, நடிக்க முடியாவிட்டால் அந்த பணத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நடிகைகளையும் ஆபாச படத்தில் நடிக்க வைக்க ராஜ்குந்த்ரா குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்ட அதிர்ச்சி தகவலும் கசிந்துள்ளது.

ராஜ்குந்த்ரா தனது செல்போன் ஒன்றை கடந்த மார்ச் மாதம் வீசி எறிந்து விட்டதாக போலீஸ் விசாரணையின்போது தெரிவித்தார். அந்த போனில் முக்கிய ஆதாரங்கள் இருந்திருக்கும் என்பதால், அதனை மீட்கும் முயற்சியை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையே ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா மற்றும் நடிகை கெனா வஷிஸ்த் மீது மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்று புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். ‘ஹாட்ஷாட்ஸ்’ செயலியில் வெளியிட தன்னை கட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுத்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராஜ்குந்த்ரா மற்றும் சம்பந்தப்பட்ட நடிகை மீது மோசடி, கொள்ளை, கொள்ளை முயற்சி, பெண்களை தவறாக சித்தரித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகை கெனா வஷிஸ்த் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர். இவர் ராஜ்குந்த்ராவின் 3 ஆபாச பட தயாரிப்பில் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.

சபலமனம் கொண்ட ஏராளமானோரை ஆபாச வலைத்தளத்துக்குள் இழுத்து பிரபல நடிகையின் கணவர் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த வழக்கு விஸ்வரூபம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News