செய்திகள்
அர்ஜூன் சம்பத்

அயோத்தி தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கனவு நனவாகி உள்ளது - அர்ஜூன் சம்பத்

Published On 2019-11-09 09:00 GMT   |   Update On 2019-11-09 09:00 GMT
அயோத்தி தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கனவு நனவாகி உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி உள்ளார்.
சென்னை:

சுப்ரீம் கோர்ட்டில் இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையடுத்து அதனை அறிந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து இந்து அமைப்பினர் அங்கு சென்றிருந்தனர்.

தமிழகத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்தும் டெல்லி சென்று இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இருந்தபடியே அயோத்தி தீர்ப்பு குறித்து பேசிய வீடியோவை அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

‘ஜெய்ஸ்ரீராம். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது. இந்திய நீதி துறைக்கும், இந்திய மக்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி. இன்று சனிக்கிழமை மகாபிரதோ‌ஷம். இந்த நல்ல நாளில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

ராமர் பிறந்த இடத்திலே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது எங்களது வாழ்நாள் கனவு. இதற்காக சிறை சென்றிருக்கிறோம். அடிபட்டிருக்கிறோம். பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

வீரகணேஷ் சாகும் தருவாயில் கூட ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என் கூறினார். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல ராமர் பிறந்த இடத்திலே ஆலயம் அமைக்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஊர்ஜிதம் செய்துள்ளது.

இதன் மூலம் கரசேவகர்களாகிய நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

எப்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதோ அதேபோல நீதிமன்றத்தின் மூலமாக இந்த ராமர் கோவில் விவகாரத்துக்கு தீர்வு கண்டுள்ளார்கள். இதற்கு மத்திய அரசுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

Tags:    

Similar News