செய்திகள்
பிரசாந்த் பூஷண்

மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷண் மறுப்பு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

Published On 2020-08-25 10:18 GMT   |   Update On 2020-08-25 10:18 GMT
மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி மற்றொரு டுவீட் பதிவிட்டிருந்தார்.

இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை முடிவில் அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்தது.

இது தொடர்பாக பிரசாந்த் பூஷண் தனது கருத்துக்களை முன்வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் பிரசாந்த பூஷண் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை வழங்கக்கூடாது. அவரை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்

பிரசாந்த் பூஷண் தனது கருத்து திரும்பப்பெறவில்லை என்றால் தண்டனை வழங்கப்படும். இன்னும் அரைமணி நேரம் காலஅவகாசம் கொடுக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரைமணி நேரம் கழித்தும் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டடார். இதனால் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இன்றைய விசாரணையின் போது ‘‘பிரசாந்த் பூஷண் போன்றோர் தெரிவிக்கும் சிறிய கருத்துக்களும் பெரிதாக பார்க்கப்படும். நீதித்துறையை சார்ந்தோர் நீதித்துறையை விமர்சனம் செய்தால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை நீர்த்துப்போக செய்துவிடும். தங்களை தற்காத்துக்கொள்ள எங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது. நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தில் மாண்புகளை காக்க வழக்கறிஞர்கள் உதவ வேண்டும்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News