செய்திகள்
கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கும் புதிய வீடியோ காட்சி

காலில் விழுந்த விவகாரத்தில் திருப்பம்: கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளர் அதிரடி இடமாற்றம்

Published On 2021-08-14 09:07 GMT   |   Update On 2021-08-14 09:07 GMT
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோபிராசிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோபால்சாமி.

இவர் தனது இடப்பிரச்சினையை சரி செய்வதற்காக ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கடந்த 6-ந் தேதி சென்றார். அப்போது அவருக்கும், அங்கு கிராம நிர்வாக அலுவலராக இருந்த கலைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துசாமி இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபால்சாமி, முத்துசாமியை ஜாதி பெயரை சொல்லி திட்டியதுடன், காலில் விழ வைத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டன. அந்த குழுவினர் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையின் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக விவசாயி, கோபால்சாமியை, கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில் முத்துசாமி, கோபால்சாமியை கன்னத்தில் அறையும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக விவசாய சங்கத்தினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் இருப்பதாவது:-

விவசாயி கோபால்சாமி, பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கோபால்சாமிக்கும், வி.ஏ.வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி, திடீரென கோபால்சாமியை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதனை அங்கிருந்த வாலிபர் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்ததும், முத்துசாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டி காலில் விழக் கூறியதாக கூறி காலில் விழுந்து நாடகமாடியுள்ளார். இந்த வீடியோவை எடிட் செய்து, அவர் காலில் விழும் பகுதி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் முத்துச்சாமி, கோபால்சாமியை தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. எனவே கிராம உதவியாளர் முத்துசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் சமீரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் உண்மை தன்மை இருப்பதை அறிந்த கலெக்டர் சமீரன், கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர்கள் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News