ஆட்டோமொபைல்
ஏர்கார்

உலகில் முதல் முறையாக பறக்கும் கார் செய்த சாதனை

Published On 2021-07-01 10:01 GMT   |   Update On 2021-07-02 16:21 GMT
பி.எம்.டபிள்யூ. என்ஜின் கொண்ட பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.


பறக்கும் கார்கள் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிசயம் மிக்க வாகனமாகவே அறியப்பட்டு வந்தது. சாலையில் வழக்கமான கார்களை போன்று செல்வதோடு, வானத்திலும் பறக்கும் திறன் கொண்ட வாகனம் என்றால் சுவாரஸ்யமான விஷயமாக இருப்பதோடு மட்டுமின்றி தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.

எனினும், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து புதுமை மிக்க சில ப்ரோடோடைப் மாடல்களையும் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கிளைன் விஷன் எனும் நிறுவனமும் பறக்கும் கார் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கி உள்ளது. இத்துடன் உலகில் முதல் முறையாக இன்டர்-சிட்டி சோதனையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.



இந்த பறக்கும் கார் நித்ராவில் இருந்து ஸ்லோவேகியாவில் உள்ள பிரடிஸ்லாவா என இரண்டு சர்வதேச விமான நிலையங்களுக்கு பறந்து சென்றுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் பறக்கும் கார் இரு விமான நிலையங்களை கடக்க 35 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. 

கிளைன் விஷன் ஏர்கார் மாடலில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 160 பிஹெச்பி திறன் வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் தரையில் இருந்து 8200 அடி உயரத்தில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 170 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். 

வானில் பறந்து வந்து தரையிறங்கியதும், ஒரே பட்டனை க்ளிக் செய்ததும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் காராக மூன்றே நிமிடங்களில் மாறிவிடுகிறது. வானில் பறப்பது மட்டுமின்றி சாதுர்யமான வளைவுகளையும் இந்த கார் நேர்த்தியாக செய்கிறது. இந்த கார் இதுவரை 40 மணி நேரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தரையில் இருந்து டேக் ஆப் ஆக 15 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. மேலும் காராக இருந்து விமானமாக மாற 2.15 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
Tags:    

Similar News