செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பாம்பனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்

Published On 2021-06-14 15:27 GMT   |   Update On 2021-06-14 15:27 GMT
பாம்பனில் சுகாதாரத்துறையின் சார்பில் நடந்த சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
ராமேசுவரம்:

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நடுநிலைப்பள்ளியில் நேற்று சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடுவதற்காக பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மற்றும் இளைஞர்களும், பெண்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

குறிப்பாக இளைஞர்களும், இளம்பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி விட்டுச் சென்றனர். இந்த தடுப்பூசி முகாமில் மருத்துவர் நான்சி தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட சுகாதாரத்துறை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் சுகாதாரத் துறையின் சார்பில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News