செய்திகள்
ராமதாஸ்

தமிழ்நாட்டில் டெங்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-07-13 07:57 GMT   |   Update On 2021-07-13 07:57 GMT
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவி வருவதால் மருத்துவத் துறையின் கவனம் முழுமையும் அதைக் கட்டுப்படுத்துவதில் தான் இருக்கிறது.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை கடந்த 5 மாதங்களாக ஆட்டிப் படைத்து வரும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இன்னும் குறையாத சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

கடந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தில் 2410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் கடந்த வாரம் வரை மட்டுமே 2090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரமாக பரவிய டெங்கு இடையில் சில வாரங்கள் குறைந்த அளவிலேயே பரவியது. ஆனால், இப்போது மீண்டும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 28 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவி வருவதால் மருத்துவத் துறையின் கவனம் முழுமையும் அதைக் கட்டுப்படுத்துவதில் தான் இருக்கிறது. டெங்கு காய்ச்சலும் இப்போது வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதை  பொதுமக்கள் கடைபிடித்து டெங்கு காய்ச்சல் தங்களை நெருங்காமல் காக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலைப் போலவே இன்னொரு அபாயமான ஜிகா காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது. தமிழ்நாட்டிற்குள் அந்த வகை காய்ச்சல் நுழையாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, டெங்கு, ஜிகா காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
Tags:    

Similar News