செய்திகள்
தரைமட்ட பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்.

உடுமலை - ஆனைமலை சாலையை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்

Published On 2021-10-21 07:01 GMT   |   Update On 2021-10-21 07:01 GMT
காட்டாற்று வெள்ளப் பெருக்கால் உடுமலை - ஆனைமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை:

உடுமலை அருகே சின்னபாப்பனூத்து,பெரியபாப்பனூத்து விளாமரத்துப்பட்டி, சாளையூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதுடன் நீர் வழித்தடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தடுப்பணைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காட்டாற்று வெள்ளம் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தின் வழியாக உடுமலை - ஆனைமலை சாலையை கடந்து சென்றது. கனமழை பெய்ததால் தென்னந் தோப்புகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

காட்டாற்று வெள்ளப் பெருக்கால் உடுமலை - ஆனைமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கார், பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் வெள்ளப் பெருக்கு குறையும் வரையில் காத்திருந்து பிறகு சென்றனர்.

நீண்ட நாளைக்கு பிறகு கிணறு, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்கள் ஒரே நாளில் நிறையும் அளவிற்கு பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News