செய்திகள்
நாமக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை படத்தில் காணலாம்.

ஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2020-10-24 14:48 GMT   |   Update On 2020-10-24 14:48 GMT
ஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் நகரில் உள்ள லாரி பட்டறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதையொட்டி லாரி பட்டறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மலர் தோரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இதனிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, நேற்று நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்து இருந்தது.

முன்னதாக மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்களை நாமக்கல் பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வழக்கத்தை விட பூக்களின் வரத்து நேற்று அதிகரித்து இருந்ததோடு, அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று ரூ.400-க்கும், கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி ரூ.240-க்கும் விற்பனையானது. அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-க்கு விற்பனையான ஒரு கிலோ சாமந்தி பூ, நேற்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை பூ, நேற்று ரூ.400-க்கும், ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ, நேற்று ரூ.500-க்கும் விற்பனை ஆனது. கடும் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்றனர்.

இதனிடையே நாமக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் பூ கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவும் அபாய சூழல் நிலவியது.
Tags:    

Similar News