ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கோவில் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்.

குலசை முத்தாரம்மன் கோவிலில் விரதத்தை தொடங்கிய தசரா வேடம் அணியும் பக்தர்கள்

Published On 2021-09-07 05:02 GMT   |   Update On 2021-09-07 07:23 GMT
விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா வருகின்ற அக்டோபர் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. அக்டோபர் 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பக்தர்கள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களது சொந்த ஊரிலேயே தசரா குழு அமைத்து, வேடமணிந்து வீதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அன்னை முத்தாரம்மன் பெயரில் தர்மம் எடுத்து, சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு வந்து காணிக்கை சேர்ப்பார்கள்.

தற்போது வேடம் அணியும் முன் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் வசதிக்கு ஏற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள் என கணக்கிட்டு விரதம் இருப்பார்கள்.

விரதம் தொடங்கும் முன்பு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நீராடி, கோவிலுக்கு வந்து கழுத்தில் மாலை அணிந்து, சிகப்பு ஆடை அணிந்து, விரதத்தை தொடங்குவார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மூடப்பட்டிருந்த கோவிலுக்கு முன்பு வெளியே நின்று, தனக்குத்தானே மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.

தசரா திருவிழாவிற்கு அரசு தடை விதித்தாலும், தசரா விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாட பக்தர்கள் தயாராகி விட்டனர்.
Tags:    

Similar News