செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் இன்று மேலும் 115 பேருக்கு கொரோனா

Published On 2021-04-09 07:32 GMT   |   Update On 2021-04-09 07:32 GMT
தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தினமும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டி உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலாக ஒரு வாலிபருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஜூலை மாதம் உச்சத்தை தொட்ட பாதிப்பினால் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக பின்னர் தொற்று பரவல் வேகம் குறைந்தது. அதன் பலனாக இந்த ஆண்டு தொடக்கத்தில் 50-க்கும் கீழ் இருந்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கட்டத்தில் ஒற்றை இலக்கத்துக்கு சென்றது. கடந்த மாதம் நெல்லை அரசு மருத்துவமனையில் வெறும் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தினமும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று 75 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு 100-ஐ கடந்து உள்ளது.

நெல்லை அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் அரசு மருத்துவமனைகளில் இன்று பரிசோதனை செய்யப்பட்டதில் நெல்லை மாநகர பகுதியில் 57 பேருக்கும், பாளையில் 11, நாங்குநேரியில் 10, மானூர், பாப்பாக்குடியில் 9, அம்பையில்7, களக்காடு 5, வள்ளியூர் 4, சேரன்மகாதேவி 2 மற்றும் ராதாபுரத்தில் ஒருவருக்கும் என 115 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது இந்த ஆண்டில் ஒருநாள் பாதிப்பில் அதிக எண்ணிக்கை ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களில் பெருமாள்புரம், டவுன் வேம்படி தெரு, இட்டமொழி, பாளை காமராஜர் நகர், பழவூர் பகுதிகளில் ஒரே வீட்டை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் பாப்பாக்குடியில் தந்தை- மகளும் அடங்குவர்.

மணிமுத்தாறு பட்டாலியன், கொண்டாநகரம், பாப்பாக்குடி மற்றும் பாளை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் 4 போலீசாருக்கு தொற்று உறுதி ஆனது.

இதேபோல் திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஊழியர் ஒருவருக்கும் தியாகராஜ நகரில் ஒரே தெருவில் 4 பேருக்கு, மானூரில் ஒரே வீட்டில் 4 வாலிபர்களுக்கும் பாதிப்பு உறுதி ஆனது. நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு டாக்டர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் இன்று அவருக்கு மீண்டும் தொற்று உறுதி ஆனது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,670 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 16 பேர் குணமடைந்தனர். இதுவரை 15,832 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 636 பேர் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே மாநகர பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் மாநகராட்சி சுகாதாரபணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இன்று பாளை, மகாராஜநகர் உள்ளிட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

Similar News