செய்திகள்
கொசு

வடகிழக்கு பருவமழை தொடக்கம்- கோவை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2020-11-05 03:24 GMT   |   Update On 2020-11-05 03:24 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கோவை மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:

கோவையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த சில மாதங்களாக டெங்கு தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவ்வப்போது மாநகராட்சிப் பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகளிலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்ததால் டெங்கு தடுப்பு பணிகளுக்கென்று தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர வார்டுகள் வாரியாக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோவையில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்டது. எனவே இதனை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரதுறை பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது. இதன்மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது.

தற்போது கோவையில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, அந்த பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களை மீண்டும் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் புகை அடிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக மாநகராட்சி பணியாளர்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் அனுமதிக்க மறுப்பதால் வெளிப்பகுதிகளில் மட்டும் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டு அழிக்கப்படுகிறது. தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடுகளில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் குடிநீரை பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும். கூடியவரையில் தண்ணீரைகாய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும். இதேபோல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் 1000 லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற அளவில் குளோரின் கலக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News