லைஃப்ஸ்டைல்
பச்சை பூஞ்சை: அறிகுறிகளும்.. தற்காப்பு நடவடிக்கைகளும்..

பச்சை பூஞ்சை: அறிகுறிகளும்.. தற்காப்பு நடவடிக்கைகளும்..

Published On 2021-07-12 04:27 GMT   |   Update On 2021-07-12 04:27 GMT
புதிய பூஞ்சை தொற்று குறித்த விபரங்களை மருத்துவ உலகம் சேகரிக்க தொடங்கி இருக்கிறது. பச்சை பூஞ்சை என்றால் என்ன? அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பார்போம்.
கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றை தொடர்ந்து பச்சை பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா  தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த 34 வயதான நபர், பச்சை பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.  கொரோனாதொற்றில் இருந்து மீண்ட அந்த நபர் தனக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்.

ஆனால்  கருப்பு பூஞ்சைக்கு பதிலாக அவரது நுரையீரல், சைனஸ் மற்றும் ரத்தத்தில் பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீஅரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின் மார்பு நோய்த்துறை தலைவர் டாக்டர் ரவி தோஷி, ‘‘நோயாளி குணமடைந்துவிட்டார். ஆனால் அவரது மூக்கில் ரத்தப்போக்கு மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட தொடங்கியது. உடல் எடை குறைந்து மிகவும் பலவீனமாகிவிட்டார்’’ என்றார். இந்த புதிய பூஞ்சை தொற்று குறித்த விபரங்களை மருத்துவ உலகம் சேகரிக்க தொடங்கி இருக்கிறது. பச்சை பூஞ்சை என்றால் என்ன? அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பார்போம்.

பச்சை பூஞ்சை என்றால் என்ன?

இது அஸ்பெர்கில்லோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஞ்சை உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் வாழும் தன்மை கொண்டது. அதிக காய்ச்சல், மூக்கில் ரத்தப்போக்கு, கடுமையான எடை இழப்பு, உடல் பலவீனம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சையை ஒவ்வொரு நாளும் பலரும் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் சுவாசிக்கிறார்கள்.

பச்சை பூஞ்சை எவ்வாறு பரவுகிறது?

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சை வாசத்தை நுகர்வதால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் அதை சுவாசிக்கும்போது நுரையீரல் அல்லது சைனஸில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். உடலின் மற்ற பாகங்களை யும் பாதிக்கும். உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நிமோனியாவை ஏற் படுத்தும்.

பச்சை பூஞ்சை தொற்றுநோயா?

பச்சை பூஞ்சை தொற்றுநோய் அல்ல. மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.

இந்த பூஞ்சை எப்படி தோன்றுகிறது?

அழுகிய தாவரங்கள், முறையான பராமரிப்பின்றி தானியங்கள் சேமித்து வைக்கப்படும் இடங்கள், காய்ந்த இலைகள், மக்கும் உர குவியல்கள் போன்றவற்றில் இவை காணப்படும்.

பச்சை பூஞ்சையின் அறிகுறிகள்?

காய்ச்சல், மூச்சுத்திணறல், வாசனையை இழக்கும் திறன், சோர்வு, இருமல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, எடை இழப்பு, சிறுநீர் குறைவாக வெளியேறுதல், மார்பில் வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

யாரை அதிகம் பாதிக்கும்?

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கருத்துப்படி, காசநோய் போன்ற நுரையீரல் சார்ந்த நோய்கள் உள்ளவர்களை இந்த தொற்று பொதுவாக பாதிக்கிறது. மேலும் மூச்சுக்குழாய் அழற்சி அஸ்பெர்கில்லோசிஸ் (ஏ.பி.பி.ஏ) எனும் வகை ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களையும் பாதிக்கிறது. `பூஞ்சை பந்து' என்றும் அழைக்கப்படும் இது நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, பிற நுரையீரல் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், அதிக அளவு கார்டிகோஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பச்சை பூஞ்சையை தடுக்க முடியுமா?

நல்ல சுகாதார நிலையை பேணுவது, வாய்வழி மற்றும் உடல் தூய்மையை பேணுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பை தடுக்க முடியும். அதிகமான தூசுக்கள் மற்றும் அசுத்தமான தண்ணீரை சேமித்து வைக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை அங்கு செல்வதாக இருந்தால் என்95 போன்ற உயர்தர முக கவசம் அணிந்திருக்க வேண்டும். காற்றின் மூலம் தூசு, மண் உடலில் படிந்தால் சோப்பு கொண்டு முகம், கை, கால்கள் உள்பட உடல் பாகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக காயங்களில் மண் அல்லது தூசுக்கள் படர்ந்திருந்தால், தவறாமல் அப்பகுதியை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
Tags:    

Similar News