செய்திகள்
கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

கொல்லிமலையில் தொடர்மழை- ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

Published On 2020-11-18 09:29 GMT   |   Update On 2020-11-18 09:29 GMT
கொல்லிமலையில் தொடர்மழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அங்குள்ள வளப்பூர் நாடு ஊராட்சியில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

அந்த கோவில் எதிரே வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரத்திலிருந்து மூலிகை கலந்த தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. அதை காணும்போது மலைமேல் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல நம் கண்ணுக்கு காட்சி தரும்.

தற்போது மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நீர் வீழ்ச்சியில் இருந்து பாய்ந்து செல்லும் வெள்ள நீரானது திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள புளியஞ்சோலை அடிவாரத்திற்கு செல்கிறது.

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி தந்துள்ளனர். அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு வந்து அந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து, குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வயதான சில சுற்றுலா பயணிகள் அங்கு வரும்போது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காண கோவில் வளாகத்தில் இருந்து நீர்வீழ்ச்சி வரை 1,200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் நடந்து செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே வயது முதிர்ந்தவர்கள் வசதிக்காக, நீர்வீழ்ச்சியை கண்டுரசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை குழுவினர் ஆய்வுக்காக வந்திருந்தனர். அப்போது கொல்லிமலைக்கு சென்று ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்தும் திட்டத்திற்கு ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News