ஆன்மிகம்
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்

Published On 2021-10-18 03:07 GMT   |   Update On 2021-10-18 03:07 GMT
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, கடந்த 8-ந் தேதி திருநாம கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில், அய்யா எழுந்தருளி பதிவலம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. பின்னர் இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடைகொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி, மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

தேரோட்டத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, ஆதிகுருசாமி, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “அய்யா அரகர சிவ சிவ, அய்யா உண்டு” என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழங்கியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் ஆங்காங்கே முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் அய்யா இந்திர விமானத்திலும், இரவு பூம்பல்லக்கு வாகனத்திலும் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருநாமக்கொடி அமர்வுடன் திருவிழா நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News