ஆன்மிகம்
அப்பாவி பக்தனுக்கு அடிபணிந்த இறைவன்

அப்பாவி பக்தனுக்கு அடிபணிந்த இறைவன்

Published On 2021-02-03 07:50 GMT   |   Update On 2021-02-03 07:50 GMT
அப்பாவித்தனமாக, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தன்மீது பக்தி செலுத்தும் பக்தர்களை, அவர் நெருங்கிச்சென்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் நான்கு பிள்ளைகள். அதில் மூத்தவனாக இருந்த பிள்ளையின் பெயர் பாலன். அவன் மிகவும் சோம்பேறியாக இருந்தான். தினமும் மூன்று வேளை உணவருந்துவான். ஆனால் எந்த வேலையும் செய்யமாட்டான். இருப்பினும் அவன் உலகமறியாத அப்பாவியாக இருந்தான்.

அவனால் அந்த குடும்பத்திற்கு உபயோகம் இல்லை. பிள்ளையாக இருந்தாலும் அவனை வைத்து உணவிடும் அளவுக்கு குடும்ப சூழ்நிலையும் இல்லை. அதனால் பாலனை, ஏதாவது ஒரு மடத்தில் சென்று தங்கிக்கொள்ளும்படி அவனது குடும்பத்தார் அறிவுறுத்தினர். அவனும் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமல், வீட்டை விட்டு வெளியேறினான்.

பின்னர் தனக்கு எப்போதும் உணவு கிடைக்கும்படியான மடத்தைத் தேடினான். ஒரு மடத்தில் இருந்த சீடர்கள் அனைவரும் நல்ல உடல் பருமனுடன் காணப்பட்டனர். அந்த மடத்தின் குருவும் கூட உடல் பருமனாகவே இருந்தார். அதனால் இங்கு உணவுக்கு பஞ்சம் இருக்காது என்று தீர்மானித்த பாலன், மடத்தின் குருவிடம் சென்று தங்கிக்கொள்ள அனுமதிகேட்டான். அவரும் அனுமதி கொடுத்துவிட்டார்.

தினமும் மடத்தில் உள்ளவர்கள் அதிகாலையிலேயே எழுந்தாலும், பாலன் வழக்கம் போல சூரியன் வெளிப்பட்ட பிறகே எழுவான். மூன்று வேளையும் வஞ்சம் இல்லாமல் உணவருந்துவான். பின்னர் மடத்தில் நடைபெறும் சொற்பொழிவுகளை கேட்டபடியே பொழுதை கழிப்பான். பாலனை எவரும் எதுவும் கேட்கவில்லை. அது அவனுக்கு மனநிம்மதியை அளித்தது. இப்படியே 10 நாட்களுக்கு மேல் சென்று விட்டது. அடுத்த நாள் பாலன் உணவருந்துவதற்காக சென்றபோது, அங்கு சமையல் நடைபெற்றதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

பாலன் பதறிப்போனான். அங்கு இருந்தவர்களிடம் “இன்று உணவு செய்யவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இன்று ஏகாதசி தினம். பெருமாளுக்கு உகந்த நாள். எனவே இந்த மடத்தில் உள்ள அனைவரும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் ஏகாதசி தோறும் இதுபோன்று விரதம் இருப்போம். அன்றைய தினம் உணவு சமைக்கப்படாது” என்றனர்.

நேராக குருவிடம் ஓடினான், பாலன். “சுவாமி.. இன்று ஏகாதசி என்பதால் மடத்தில் உணவு சமைக்கப்படாதாம். என்னால் பசி பொறுக்க முடியாது. எனக்கு மட்டுமாவது உணவு சமைத்து தர ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.

அதற்கு குருவோ, “உன் ஒருவனுக்காக சமைக்க இயலாது. வேண்டுமானால் உன் ஒருவனின் உணவுக்கு தேவையான பொருட்களைத் தரச் சொல்கிறேன். மடத்திற்கு வெளியே இருக்கும் ஆற்றின் கரையில் வைத்து சமைத்து உணவருந்தி விட்டு வா..” என்றார்.

பாலனுக்கு மடத்தில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது. ஒரு நாளும் அவன் வேலை செய்ததில்லை என்றாலும், உணவருந்தாமலும் இருந்ததில்லையே.. அதனால் தனக்கு தெரிந்ததை செய்து உணவை சமைத்து விட்டான். தினமும் மடத்தில் உணவருந்துவதற்கு முன்பாக இறைவனுக்கு படைத்து விட்டுதான் சாப்பிட வேண்டும் என்று குரு சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்த பாலன், ராமபிரானின் நாமத்தைச் சொல்லி அழைத்தான். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் வருத்தம் அடைந்த பாலன், “ராமா.. நீ வரவில்லை என்றால், நான் எப்படி உணவருந்துவது. என்னால் பசி பொறுக்க முடியவில்லை. நீ வந்து சாப்பிட்டால்தான், நான் சாப்பிட முடியும்” என்றான்.

அவனது அப்பாவித்தனத்தால் கவரப்பட்ட ராமபிரான், சீதாதேவியை அழைத்துக் கொண்டு உணவருந்த வந்துவிட்டார். இப்போது பாலனுக்கு அதிர்ச்சி.. ‘நாம் இருவர் சாப்பிடும் வகையில்தானே சமைத்து வைத்துள்ளோம். சீதாவும் வந்திருக்கிறாரே’ என்று நினைத்தான். இருந்தாலும் உணவருந்த வந்த ராமருக்கும், சீதைக்கும் உணவிட்டு மகிழ்ச்சியாக அனுப்பிவைத்தான். இறுதியில் பாலனுக்கு உணவில்லை. அன்று அவன் விரதம் இருந்தான்.

அடுத்த 15 நாட்களுக்குப் பின் மீண்டும் ஏகாதசி திதி வந்தது. இப்போது குருவிடம் சென்ற பாலன், “குருவே.. எனக்கு உணவு போதவில்லை. கூடுதலாக சமையல் பொருட்கள் வேண்டும்” என்று கேட்டான். அதன்படியே அவனுக்கு கூடுதல் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆற்றங்கரை சென்று சமையல் செய்தவன் இப்போது, “ராமபிரானோடு, சீதாதேவியையும் உணவருந்த வரும்படி அழைத்தான். ஆனால் அவர்கள் இருவரோடு லட்சுமணனும், அனுமனும் வந்துவிட்டனர். ராமர் கேட்டார், “அனைவருக்கும் உணவிருக்கிறதல்லவா?”.

பாலனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இது என்னடா சோதனை.. ஒருத்தர கூப்பிட்டா, இரண்டு பேர் வருகிறார்கள். இரண்டு பேரைக் கூப்பிட்டால் நான்கு பேர் வருகிறார்கள்’ என்று நினைத்தாலும், அனைவரையும் அமரவைத்து உணவளித்தான். இன்றும் பாலனுக்கு உணவு கிடைக்கவில்லை. விரதம் இருந்தான்.

அடுத்த ஏகாதசி அன்று குருவிடம் சென்ற பாலன், “குருவே.. ராமரை உணவருந்த அழைத்தால் அவர் மேலும் நான்கு பேரை அழைத்து வந்து விடுகிறார். எனவே எனக்கு இன்னும் கூடுதலாக அரிசி, பருப்பு, காய்கறிகள் வேண்டும்” என்றான்.

குருவும் ‘வேறு யாருக்கோ உணவு அளிக்கிறான் போல’ என்று நினைத்து, அவன் கேட்டபடியே ஐந்து, ஆறு பேர் உணவருந்தும் வகையிலான பொருட்களைக் கொடுத்து அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்டு ஆற்றங்கரை சென்ற பாலன், உணவை சமைத்து முடித்து, ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோரை அழைத்தான். ஆனால் இன்று அவர்கள் நால்வரோடு, பரதன் மற்றும் சத்ருக்கணனும் வந்துவிட்டனர்.

‘சரிதான்.. நமக்கு இன்றும் உணவு கிடைக்கப்போவதில்லை’ என்று நினைத்த பாலன், வந்திருந்த அனைவருக்கும் உணவிட்டு விட்டு, அன்றும் விரதம் இருந்தான்.

மீண்டும் ஏகாதசி வந்தபோது, குருவிடம் சென்ற பாலன், “குருவே.. 10 கிலோ அரிசி, 10 கிலோ பருப்பு, ஒரு மூட்டை காய்கறிகள் வேண்டும். நான் நினைப்பதை விட அதிகமானவர்கள் சாப்பிட வருகிறார்கள்” என்று கூறினான்.

இப்போது குருவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ‘இவன் நாம் கொடுக்கும் பொருட்களை எல்லாம், பணத்திற்காக விற்பனை செய்துவிடுகிறான்போல’ என்று நினைத்தார். இருப்பினும் அவன் கேட்ட பொருட்களை கொடுத்து விட்டு, சில சீடர்களுடன் பாலனை பின் தொடர்ந்து செல்ல முடிவு செய்தார்.

சமையல் பொருட்களுடன் ஆற்றங்கரைக்கு வந்த பாலன், உணவை சமைக்காமல், ராமர், சீதா, லட்சு மணன், பரதன், சத்ருக்கணன், அனுமன் ஆகியோரை அழைத்தான். ஆனால் அங்கு அவர்களோடு, கவுசல்யா, கைகேயி, சுபத்ரா, ராமருடைய மூன்று தம்பிகளின் மனைவியர் என்று பலரும் வந்துவிட்டனர்.

ராமபிரான், “பக்தனே.. உணவு சமைக்கவில்லையா..?” என்றுகேட்டார். அதற்கு பாலன், “நான் சமைத்து வைக்கிறேன். கடைசியில் எனக்கே இல்லாமல் அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறீர்கள். அதற்கு நான் ஏன் சமைக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான பொருட்கள் இங்கே இருக்கிறது. நீங்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்த மரத்தடியில் படுத்துவிட்டான்.

பக்தனின் சொல்லை ஏற்றார் ராமபிரான். அவரும், அவரது குடும்பமும் இணைந்து அன்றைய சமையல் வேலையைச் செய்தனர். அந்த நேரம் பார்த்து மடத்தின் குரு அங்கு வந்தார். அவரது கண்ணுக்கு ராமபிரானோ, அவரோடு வந்தவர்களோ புலப்படவில்லை. தரையில் காய்கறிகள் சிதறிக்கிடப்பதும், மரத்தடியில் பாலன் படுத்து உறங்குவதும்தான் தென்பட்டது. பாலனின் அருகில் சென்று அவனை எழுப்பிய குரு, “உணவு சமைக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு பாலன், “அதுதான் சமையல் வேலை நடந்துகொண்டிருக்கிறதே. உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டவன், ராமபிரானிடம் “சுவாமி.. என்னுடைய குருவிற்கு நீங்கள் தெரியவில்லையாமே.. அவர் என்னை சந்தேகப்படமாட்டாரா..” என்றான்.

உடனே ராமர், தன் குடும்பம் சகிதமாக சமையல் பணியை செய்தபடியே, மடத்தின் குருவிற்கும், சீடர்களுக்கும் காட்சியளித்தார். அதைக்கண்டு ஆனந்தம் அடைந்த குரு, பாலனின் பக்திக்கு, ராமபிரான் குடும்ப சகிதமாக வந்ததை எண்ணி மகிந்தார். பாலனை வணங்கினார்.

இறைவன் தன்னுடைய பக்தர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பக்திக்கு கட்டுப்படுவார். என்றாலும், அப்பாவித்தனமாக, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தன்மீது பக்தி செலுத்தும் பக்தர்களை, அவர் நெருங்கிச்சென்று வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
Tags:    

Similar News