ஆன்மிகம்
தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை

Published On 2020-11-14 04:30 GMT   |   Update On 2020-11-13 04:57 GMT
மிகவும் எதிர்பார்ப்புடன் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் தீமையை அழித்து மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் தீபத்திருநாளாகும்.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளிப் பண்டிகைக்கு முக்கியமான இடமுண்டு. மிகவும் எதிர்பார்ப்புடன் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் தீமையை அழித்து மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் தீபத்திருநாளாகும்.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை

வடஇந்தியர்கள் செல்வத்திற்கு அதிபதியான பெண் கடவுள் லக்‌ஷ்மி தனது மக்களை செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிக்கும் திருநாளே தீபாவளி என்று நம்புகிறார்கள். இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளைக் குறிக்கும் விதமாக இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

சீக்கியர்கள் தங்கள் மதகுருமான ஹர்கோபிந்த் ஜி அவர்கள் முகலாய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளை அவர் நினைவாக தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். இதே தீபாவளித் திருநாளில்தான் குவாலியர் சிறையிலிருந்து ஹர்கோபிந்த் ஜி அவர்கள் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையானது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. (1) முதல் நாள் ‘தந்தேராஸ்’ என்று சொல்லப்படும் புனிதமான நாளில் மக்கள் தங்கம், வெள்ளி, வாகனங்கள் போன்றவற்றை புதியதாக வாங்குவதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள். (2) இரண்டாம் நாளான ‘நரக சதுர்த்தசி’ அன்று சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்கள்களுடன் காலை உணவை உட்கொள்கிறார்கள். இந்த தினத்தில்தான் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. (3) மூன்றாம் நாளான ‘லக்‌ஷ்மி பூஜை’யானது இந்த ஐந்து நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும். செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைத் தரும் இந்துக் கடவுளான லக்‌ஷ்மி தேவிக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகின்றது. செழிப்பை வரவேற்கும் விதமாக வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளி விளக்கானது ஏற்றப்பட்டு லக்‌ஷ்மி பூஜையானது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

(4) நான்காவது நாளான ‘கோவர்தன் பூஜையானது இந்திரனை கிருஷ்ணர் தோற்கடித்த நாளாகும். கிருஷ்ணர் இயற்கையை வணங்குமாறு கோரியதால் இந்தப் பூஜையானது கொண்டாடப்படுகின்றது. (5) ஐந்து நாட்களில் கடைசி நாளன்று ‘பாய்துஜ்’ கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் சகோதரிகள் தங்களுடன் பிறந்த சகோதரர்கள் நீண்ட ஆயுளு, நிறைந்த செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரி வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் உணவருந்தி அவர்கள் தரும் பரிசுப்பொருட்களை வாங்கிக் கொள்வது வழக்கமாகும்.

வட இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகையின் போது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிமயமாகக் காட்சியளிப்பதைப் பார்க்க முடியும். பட்டாசுகளின் ஒலியானது விண்ணைப் பிளக்கும் அளவிற்கு நாள் முழுவதும் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். அதே போல் இரவானது பட்டாசு வான வேடிக்கைகளும் வண்ணமயமாக ஜொலிப்பதைப் பார்க்க முடியும்.

கிழக்கு இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை:-

கிழக்கு இந்தியாவிலும் தீமைக்கு எதிரான வெற்றியின் கொண்டாட்டமாகவே தீபாவளிப் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது. அனைத்து வீடுகளின் வாசல்களையும் வண்ண ரங்கோலிக் கோலங்கள் அலங்கரிக்கின்றன. பாரம்பரியமாக, ரங்கோலியானது வெள்ளை அரிசி மாவு மற்றும் சிவப்புப் பொடியால் போடப்பட்டு அவற்றைச் சுற்றிலும் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றது.

கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையின் போது ஆடானது தெய்வத்திற்குப் பலியிடுவதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள். தீபாவளிக் கொண்டாட்டங்களின்போது கிழக்கிந்தியா முழுவதும் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், அவர்களுக்கு மரியாதை செய்வதும் பொதுவான நிகழ்வாக உள்ளது.

மேற்கிந்தியாவில் தீபாவளிப் பண்டிகை:-

மேற்கிந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் தெய்வமான லக்‌ஷ்மியை வரவேற்க வீட்டின் நுழைவாயிலில் வண்ண ரங்கோலிகளைப் போடுவதுடன் தெய்வத்தின் சிறிய அடிச்சுவடுகளையும் வீடு முழுவதும் கோலத்தினால் இடுகிறார்கள். அந்த அடிச்சுவடு முத்திரைகள், செல்வத்தின் அடையாளங்கலாக நம்பப்படுகின்றன.

மஹாராஷ்டியர்கள் தங்கள் வீடுகளில் லக்‌ஷ்மி பூஜை செய்து ‘ஃபரல்’ என்று அழைக்கப்படும் விருந்தை ஏற்பாடு செய்கிறார்கள். எல்லா வீடுகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு வகைவகையான இனிப்புகளும் செய்யப்படுகின்றன. கொத்தமல்லி விதைகள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்பை கடவுளுக்கு நைவேத்யமாகப் படைப்பது ஒரு கண்கவர் பாரம்பரிய நிகழ்ச்சியாகும். தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ‘உப்தான்’ எனப்படும் கடலை மாவினைத் தேய்த்து ஸ்நானம் செய்வது மேற்கிந்தியாவில் பாரம்பரியமான பொதுவான நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

தென்னிந்தியாவில் தீபாவளிப் பண்டிகை:-

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா என தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாரம்பரியத்துடனும், கோலாகலமாகவும் தீபாவளிப் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது. தீபாவளிக்கு முன்பு வீடுகளைச் சுத்தப்படுத்தி, பூஜை பாத்திரங்களைக் கழுவி அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் இடுகிறார்கள். தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடைகளை உடுத்திக் கொள்கிறார்கள்.

கடவுளுக்குப் பூஜையானது செய்யப்பட்டு, குடும்ப அங்கத்தினர்களுடன் பலவிதமான இனிப்புகள் மற்றும் காரத்துடன் காலை உணவானது உண்ணப்படுகின்றது. பின்பு தங்களது வீட்டில் செய்த பலகாரங்களை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிகளை வெடித்து மிகவும் கோலாகலமாக தீபாவளிப் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது.

தீபாவளிப் பண்டிகையானது பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்பட்டாலும் இது தேசம் முழுவதும் வாழும் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்த தீப ஒளித்திருநாள் நமது அனைவரது வாழ்விலும் ஒளிகாட்டும் திருநாளாக அமைய இறைவனை வேண்டுவோம்.
Tags:    

Similar News