செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் பற்றி சூதாட்டம்: புனே கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

Published On 2017-08-10 02:12 GMT   |   Update On 2017-08-10 02:12 GMT
புனேயில், டி.என்.பி.எல். கிரிக்கெட் பற்றிய சூதாட்டத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே:

8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த போட்டியை மையப்படுத்தி மராட்டிய மாநிலம் புனே நிக்டி பகுதியில் உள்ள கட்டிடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட கட்டிடத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அங்குள்ள ஒரு அறையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்பான சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. இந்த சூதாட்டத்தில் புனேயைச் சேர்ந்த தேசிய வாத காங்கிரஸ் கவுன்சிலர் ஜாவேத் ரம்ஜான் சேக் (வயது47) என்பவரும் ஈடுபட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஜாவேத் ரம்ஜான் சேக் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான மற்றவர்கள் பெயர் நவீன் பகவான்(43), ராகேஷ் நேமிசந்த்(37), பிரவின் சிவாஜி பவார்(36), ஜாகீர் மஸ்தான் சேக்(29) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் ரூ.53 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கைதான 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

Similar News