செய்திகள்
நித்யானந்தா

கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ

Published On 2020-02-23 12:50 GMT   |   Update On 2020-02-23 12:50 GMT
தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன் என்று நித்யானந்தா புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை:

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் மீது பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது 2 மகள்களை கடத்தி அகமதாபாத்தில் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக கூறினார்.

அதன் பேரில் நித்யானந்தா மீது கடத்தல் வழக்குபதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, நித்யானந்தா மீது கர்நாடகத்தில் பாலியல் வழக்கு உள்ளது. அடுத்தடுத்த வழக்குகள் காரணமாக நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார்.

அவர் ஈகுவெடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கர்நாடக கோர்ட்டு ரத்து செய்தது. அவரை உடனடியாக கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டது.

ஏற்கனவே கடத்தல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கைது செய்வதற்காக குஜராத் போலீசார் சர்வதேச போலீசார் (இன்டர்போல்) மூலம் ‘புளுகார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவரது இருப்பிடத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள நித்யானந்தா அவ்வப்போது சமூக வலை தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை ஒருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை.

சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கி விட்டது.

என்னுடைய மரணத்துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்து விட்டேன்.

தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்து விட்டேன்.

நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில்தான். அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News