செய்திகள்
கொரோனாவுக்கு பலி

பெங்களூருவில் 2 மாதங்களில் 8,700 பேரின் உயிரை குடித்த கொரோனா

Published On 2021-06-04 03:48 GMT   |   Update On 2021-06-04 03:48 GMT
பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 7¼ லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,700 பேர் இறந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்தது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் பெங்களூருவில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஏப்ரல் 1-ந் தேதி வரை பெங்களூருவில் 4,630 பேர் தான் இறந்து இருந்தனர். ஆனால் மே 31-ந் தேதி வரை 13 ஆயிரத்து 346 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து விட்டனர். இதன்மூலம் 2 மாதத்தில்
பெங்களூரு
வில் கொரோனாவுக்கு 8,716 உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த மே 10-ந் தேதி பெங்களூருவில் ஒரே நாளில் 374 பேர் இறந்து இருந்தனர். படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் குறைபாடு, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்பட பல காரணங்களால் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்க நேரிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி வரை பெங்களூருவில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 333 பேர் தான் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் மே 31-ந் தேதிக்குள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 229 பேர் கொரோனா பாதிப்புக்குள் உள்ளானார்கள். அதாவது 2 மாதத்தில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 496 பேரை
கொரோனா
தன்வசப்படுத்தி கொண்டது.

கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 26,756 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர்பெங்களூருவில் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும்
பெங்களூருவுக்கு திரும்பி வர வாய்ப்பு உள்ளது. இதனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News