செய்திகள்
கோப்புபடம்

4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை - தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும்

Published On 2021-07-24 08:00 GMT   |   Update On 2021-07-24 08:42 GMT
தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை:

தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் பெய்து வருகிறது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

மற்ற மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.


26 முதல் 28-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை 17 செ.மீ., அவலஞ்சி-15, சோலையார்-13, சின்னக்கல்லார்-12, நடுவட்டம்-9, சித்தார், தேவலா தலா-5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழக கடலோரம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று பலத்த காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

அதே போல கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் 24 முதல் 26-ந்தேதி வரை பலத்த காற்று வீசும். தென் மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் 24 முதல் 28-ந்தேதி வரை 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...சென்னையில் 2வது விமான நிலைய பணியை உடனே தொடங்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

Tags:    

Similar News