தமிழ்நாடு
மதுரை ரெயில்வே நிலையம்

கடந்த நிதியாண்டியில் மதுரை ரெயில்வே கோட்டம் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளது- அதிகாரி தகவல்

Published On 2022-01-26 09:59 GMT   |   Update On 2022-01-26 09:59 GMT
பயணிகள் ரெயில்கள் மூலம் ரூ.280.80 கோடியும், சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.191.44 கோடியும், இதர வருமானமாக ரூ.38.11 கோடியும் வருமானமாக ஈட்டப்பட்டு உள்ளது.
மதுரை:

மதுரை ரெயில்வே காலனியில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ராணுவ உடை அணிந்து தேசிய கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இந்த நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை மதுரை கோட்டம் ரூ.510.35 கோடியை மொத்த வருமானமாக ஈட்டி உள்ளது. ‌ இது கடந்த ஆண்டை காட்டிலும் 97 சதவீதம் அதிகம்.

அதாவது பயணிகள் ரெயில்கள் மூலம் ரூ.280.80 கோடியும், சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.191.44 கோடியும், இதர வருமானமாக ரூ.38.11 கோடியும் வருமானமாக ஈட்டப்பட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வரை 1.7558 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 63 சதவீத அளவில் சுமார் 0.5273 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டு உள்ளது. வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 848 டிராக்டர்கள் வெளிமாநிலங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அடுத்தபடியாக கட்டணம் இல்லா வருமானத்தை பெருக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மதுரை, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நடைமேடை எண் மற்றும் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு விளம்பர பலகைகள் நிறுவப்பட்டு உள்ளன.

முன்பதிவு மற்றும் முன் பதிவில்லா பயணச் சீட்டுகளை பதிவு செய்யும்போது பயணக் கட்டணம், ரெயில் பெயர், பயண தேதி போன்ற விவரங்களை ரெயில் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு தகவல் பலகைகள், 27 ரெயில் நிலைய பயணச்சீட்டு மையங்களில் நிறுவப்பட உள்ளன.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், உடல் நலம் குன்றியோரை ரெயில் நிலைய வெளிவளாக பகுதியில் இருந்து நடைமேடைக்கு அழைத்து செல்லவும், ரயிலில் இருந்து ரெயில் நிலைய முகப்பு பகுதிக்கு அழைத்து வரவும் கட்ணம் இல்லா மின்கல ஊர்தி சேவை மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகள் வசதிகளை மேம்படுத்த 27 ரெயில் நிலையங்களில் ரூ.40 கோடி செலவில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

34 ரெயில் நிலையங்களில் ரூபாய் 22 கோடி செலவில் பயணிகள் வசதிக்காக நடைமேடைகளின் உயரம் உயர்த்தப்படுகிறது.

திருச்சி- காரைக்குடி, பழனி-பொள்ளாச்சி, கொல்லம்-புனலூர், மானாமதுரை- விருதுநகர் ரெயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் 2022-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்-பழனி, செங்கோட்டை-புனலூர், செங் கோட்டை- திருநெல்வேலி- திருச்செந்தூர் மற்றும் விருதுநகர்- தென்காசி ஆகிய ரெயில் பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் 2022-23ம் நிதியாண்டில் நிறைவடைய உள்ளன.

இதே காலத்தில் மதுரை-திருமங்கலம், துலுக்கபட்டி-கோவில்பட்டி ரெயில் பிரிவுகளில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணிகளும் நிறைவுபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தமிழ் ரமேஷ்பாபு, உதவி பாதுகாப்பு ஆணையர் சுபாஷ், உதவி ஊழியர்கள், அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News