செய்திகள்
கோப்புப்படம்

கருமத்தம்பட்டியில் கொரோனா தடுப்பூசி கேட்டு பெண்கள் மறியல் போராட்டம்

Published On 2021-07-29 11:18 GMT   |   Update On 2021-07-29 11:18 GMT
கிராமப்புறங்களில் தடுப்பூசி டோக்கன் வாங்குவதற்காக பொதுமக்கள் இரவு நேரங்களில் ரோட்டோரம் படுத்து உறங்கினர்.
கருமத்தம்பட்டி:

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கிராமப்புறங்களில் தடுப்பூசி டோக்கன் வாங்குவதற்காக பொதுமக்கள் இரவு நேரங்களில் ரோட்டோரம் படுத்து உறங்கினர்.

இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி காலை 8 மணிக்கு தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்படும், பின்னர் 9 மணிக்கு டோக்கன் வினியோகிக்கப்படும், தொடர்ந்து காலை 10 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போடுவதில் எழுந்துள்ள பிரச்சனைகள் வெகுவாக குறைந்துள்ளது. இந்தநிலையில் கருமத்தம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக முறையான தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி அந்த பகுதி மக்கள் இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கருமத்தம்பட்டியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

கொரோனா தடுப்பூசி மையமான இங்கு கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்படவில்லை. ஆனால் காலை 6 மணி முதலே பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். ஒரு வாரத்துக்கும் மேலாக ஏமாற்றம் அடைந்த ஆண்களும், பெண்களும் என 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் சுகாதார நிலைய அதிகாரிகளுடன் தடுப்பூசி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடுரோட்டில் அமர்ந்து மறியலி ல் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் பொதுமக்களை சமரசப்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பதாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கூறுகையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் நாங்கள் இங்கு வந்து செல்கிறோம். ஆனால் கர்ப்பிணிகளுக்கு செலுத்துவதற்கான கொரோனா தடுப்பூசி மட்டும் தான் தங்களிடம் இருப்பதாகவும், பொது மக்களுக்கான தடுப்பூசி கையிருப்பில் இல்லை எனவும் தெரிவிக்கிறார்கள். எனவே பல நாட்கள் ஏமாற்றத்துக்கு பிறகே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News