செய்திகள்
கார்களில் எடுத்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 லட்சம் மற்றும் 100 பவுன் நகைகளை படத்தில் காணலாம்

தமிழகத்தில் 18 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.34 லட்சம், 100 பவுன் நகை சிக்கியது

Published On 2020-12-12 22:00 GMT   |   Update On 2020-12-12 22:00 GMT
தமிழகம் முழுவதும் 18 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.34 லட்சம், 100 பவுன் நகை சிக்கியது.
சென்னை:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையிலும் சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்துவது வழக்கம்.

ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தமிழகத்தில் உள்ள 18 சோதனைச்சாவடிகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 17 சோதனைச்சாவடிகள் வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ.) கட்டுப்பாட்டில் உள்ளவை ஆகும். ஒரு சோதனைச்சாவடி போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.34 லட்சத்து 17 ஆயிரத்து 935 கைப்பற்றப்பட்டது.

சோதனை நடைபெற்ற சோதனைச்சாவடிகள், அங்கு கைப்பற்றப்பட்ட பணம் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை சோதனைச்சாவடியில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம், ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ரூ.72 ஆயிரத்து 750, திருத்தணி சோதனைச்சாவடியில் ரூ.43 ஆயிரத்து 410, வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் ரூ.94 ஆயிரம், சேர்க்காடு சோதனைச்சாவடியில் ரூ.38 ஆயிரத்து 875, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி சாலை சோதனைச்சாவடியில் ரூ.16 ஆயிரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சோதனைச்சாவடியில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 100, ஓசூர் பாகலூர் சாலை சோதனைச்சாவடியில் ரூ.25 ஆயிரத்து 920, காளிக்கோவில் சோதனைச்சாவடியில் ரூ.31 ஆயிரத்து 510, கோவை மாவட்டத்தில் உள்ள கே.ஜி.சாவடி வாளையார் சோதனைச்சாவடியில் ரூ.87 ஆயிரம், பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச்சாவடியில் ரூ.52 ஆயிரம், நெல்லை மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் ரூ.41 ஆயிரத்து 290, தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டி சோதனைச்சாவடியில் ரூ.5 ஆயிரத்து 500, குமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் ரூ.64 ஆயிரத்து 140, போலீஸ் சோதனைச்சாவடியில் ரூ.20 ஆயிரத்து 740, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் ரூ.34 ஆயிரத்து 700 என கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 935 பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தலைக்குந்தா சோதனைச்சாவடியிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இங்கு பணம் எதுவும் சிக்கவில்லை.

இதுதவிர விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சத்திரரெட்டிபட்டி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தினர். பின்னர் அந்த சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையை நோக்கி வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். முதலில் வந்த காரில் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தனது கணவர் ராஜாவுடன் இருந்தார்.

அந்த காரில் சோதனையிட்ட போது கத்தை கத்தையாக பணம் மற்றும் புத்தம்புதிய நகைகள் இருந்தன. பின்னால் வந்த மற்றொரு காரில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த் இருந்தார். அவருடன் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த அருள்பிரகாஷ் என்ற போக்குவரத்து அலுவலக இடைத்தரகரும் இருந்தார். இந்த காரிலும் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 2 கார்களையும் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வந்தவுடன் 2 கார்களிலும் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும், அந்த 4 பேரையும் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதில் கலைச்செல்வி இருந்த காரில் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் ரொக்கமும், 100 பவுன் புத்தம் புதிய நகைகளும் இருந்தன. மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் வந்த காரில் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் இருந்தது.

அந்த நகை, பணம் எப்படி வந்தது என்பதற்கு உரிய விளக்கம் அளிக்காததால் போலீசார் அந்த பணத்தையும், நகைகளையும் பறிமுதல் செய்தனர். 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து வளாக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் 2 பேரிடமும் விசாரணையை தொடங்கினர். விசாரணையின்போது வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தனது காரில் இருந்த நகைகள், தான் பயன்படுத்திய நகைகள் என்று கூறியதாக தெரிகிறது.

கணக்கில் வராத பணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சோதனைச்சாவடிகளில் பணியில் இருந்த வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களிடமும், உதவியாளர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது சோதனைக்குள்ளான பல சோதனைச்சாவடிகள் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News