லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு உடல் பருமனை உருவாக்கும் ‘டிவி’

குழந்தைகளுக்கு உடல் பருமனை உருவாக்கும் ‘டிவி’

Published On 2020-08-25 04:58 GMT   |   Update On 2020-08-25 04:58 GMT
தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் 7 வயதுக்குள் உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
டீன் ஏஜ் பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுவதுதான் உடல் பருமனுக்கான பொதுவான காரணமாக கருதப்படுகிறது. உணவு பழக்கங்கள் மட்டுமின்றி அன்றாட செயல்பாடுகளாலும் உடல் பருமன் அடைகிறது. ஸ்பெயினை சேர்ந்த சுகாதார நிறுவனம் ஒன்று குழந்தைகளின் வெவ்வேறு வாழ்க்கை முறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் குழந்தைகளின் உடல் இயக்க செயல்பாடுகள், தூங்கும் கால அளவு, டி.வி. பார்க்கும் நேரம், பச்சை காய்கறிகளை அடிப்படையாக கொண்ட உணவு பொருட்களை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வது ஆகிய ஐந்து விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அத்துடன் நான்கு வயதுக்குள் குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் பெற்றோரிடம் ஆய்வுக்குழுவினர் கேட்டுஅறிந்திருக்கிறார்கள். மேலும் நான்கு மற்றும் ஏழு வயதுகளில் குழந்தைகளின் ரத்த அழுத்தம், உடல் எடைக்கு ஏற்ற உயரம் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்திருக்கிறார்கள். 1480 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாமல் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் 7 வயதுக்குள் உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வுக்குழுவின் இணை தலைவரான டோரா ரோமகேரா, “குழந்தைகள் தொலைக்காட்சியை பார்க்கும்போது, ஏராளமான விஷயங்களை காண்கிறார்கள். அதில் பார்க்கும் உணவு பொருட்களை உட்கொள்வதற்கு விரும்புகிறார்கள். இனிப்பு பலகாரங் கள், பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட தானிய பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் ஊட்டச்சத்துக்கள் குறைவான அளவிலேயே இருக்கின்றன. நான்கு வயதில் இத்தகைய பொருட்களை அதிக அளவில் உட்கொள்வது ஏழு வயதில் உயரத்திற்கு பொருத்தமில்லாத உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது” என்கிறார்.

குறைவான நேரம் தூங்குவதும் உடல் பருமன் பிரச்சினைக்கு மற்றொரு முக்கிய காரணம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News