ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் கோவில்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: முத்தாரம்மன் கோவிலில் 7 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-10-04 04:56 GMT   |   Update On 2021-10-04 04:56 GMT
திருவிழாவில் பக்தர்கள் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழாவாகும்.

இந்த ஆண்டு திருவிழா வருகிற 6-ந் தேதி (புதன் கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அன்று முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

2-ம் நாளான 7-ந் தேதி (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 3,4,5-ம் நாள் திருவிழா நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

6-ம் நாளான 11-ந் தேதி (திங்கட்கிழமை), 7-ம் நாளான 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 8-ம் திருநாளான 13-ந் தேதி (புதன்கிழமை), 9-ம் திருநாளான 14-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து 10-ம் திருவிழாவான 15-ந் தேதி நடு இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதில் கோவில் முன்பு நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

11-ம் நாளான 16-ந் தேதி (சனிக்கிழமை), 12-ம் திருநாளான 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கும் தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மொத்தம் 12 நாள் நடைபெறும் தசரா திருவிழாவில் 5 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பக்தர்கள் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், தற்காலிக சிறப்புகடைகள் வைக்கக்கூடாது என்றும், சிறப்பு கலை நிகழ்ச்சி, மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும், முககவசம், தனிநபர் இடைவெளி கண்டிப்பாக தேவை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.

தசரா திருவிழாவையொட்டி கோவிலில் வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் சிறப்புற நடைபெறுவதற்கு தசரா பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருவிழா தொடர்பான 11 நாள் நிகழ்ச்சிகளும் பக்தர்கள் வசதிக்காக யூ-டியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News