செய்திகள்
திருமாவளவன்

அ.தி.மு.க. அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

Published On 2021-11-23 10:29 GMT   |   Update On 2021-11-23 10:29 GMT
அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சிறப்பு வாய்ந்த சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தம் தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டன.

‘அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும், மறு குடியமர்த்தம் செய்யப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டித் தர வேண்டும், அவர்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இல்லாமல் நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

நரேந்திர மோடி அரசு 2014-ல் பதவி ஏற்றதும் அந்த சட்டத்தில் இருந்த மக்களுக்கு சாதகமான அம்சங்களை எல்லாம் மாற்றி விட்டு அதை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக திருத்தம் செய்து ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தது. அதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் காலாவதியாகி விட்டது.

ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்தத் திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டுவந்தன. பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளில் அ.தி.மு.க. ஆட்சி இருந்த தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது 2015-ல் அந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.


ஆனால் அதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என 2019-ல் அறிவித்தது.

அதன்பின்னர் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு மீண்டும் அதே சட்டத் திருத்தங்களை 2013-ம் ஆண்டுக்கு முன் தேதியிட்டுக் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்தையும் எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்த்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், அந்த சட்டம் செல்லுபடியாகும் என நீதிமன்றம் கூறிவிட்டது.

அந்த மக்கள் விரோத சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் உள்ளது. எடப்பாடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தான் சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பதையும், தற்போது நடைமுறையில் இருக்கும் அந்த சட்டம் தி.மு.க., வி.சி.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரானதாகும் என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து அனுமதிப்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த கேடு விளைவிப்பதாகவே இருக்கும். ஆதலால், சட்டமன்ற கூட்டத்தொடர் வரை காத்திருக்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் அந்த சட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.100 கோடி ஊழல்

Tags:    

Similar News