செய்திகள்
அரசு பஸ்

தீபாவளிக்கு 34,259 பஸ்கள் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2021-10-31 02:13 GMT   |   Update On 2021-10-31 02:13 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் தொடங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக, இதுவரை 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், எனது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, உரிய அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி, பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் தொடங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக, இதுவரை (நேற்றைய நிலவரப்படி) 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் தங்களின் வசதியான பயணத்துக்கு முன்பதிவு செய்துகொண்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 1-ந்தேதி (நாளை) முதல் 3-ந்தேதி வரை, தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 3 ஆயிரத்து 506 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 806 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6 ஆயிரத்து 734 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 540 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக தீபாவளி பண்டிகையையொட்டி தினசரி பஸ்கள், சிறப்பு பஸ்கள் என 34 ஆயிரத்து 259 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 4 ஆயிரத்து 319 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17 ஆயிரத்து 719 பஸ்களும் இயக்கப்படுகின்றன.



முன்பதிவு செய்துள்ள பஸ்கள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044-24749002, 1800425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக்கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 இடங்களில் இருந்து...

சென்னையில் 6 இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* மாதவரம் புதிய பஸ் நிலையம்- ஆந்திரா செல்லும் பஸ்கள் (செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்).

* கே.கே.நகர் மாநகர பஸ்நிலையம்- புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பஸ்கள் (கத்திபாரா பாலம், எஸ்.வி.படேல் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும்).

* தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ்நிலையம்- திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள் (ஜி.எஸ்.டி.சாலை வழியாக செல்லும்).

* தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிறுத்தம்- திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள். (ஜி.எஸ்.டி.சாலை வழியாக செல்லும்)

* பூந்தமல்லி பஸ்நிலையம் - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள்.

* கோயம்பேடு பஸ்நிலையம்- மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்கள்.

தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாது

சிறப்பு பஸ்கள் இயக்கத்தால் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் ஆம்னி பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* கோயம்பேடு பஸ் நிலையத்தில் அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட அரசு பஸ்கள், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லும்.

* அரசு பஸ்கள் வழக்கம்போல் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது.

* கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பூந்தமல்லி சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது.

* கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பஸ்கள் 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (ஓ.எம்.ஆர்.- ஈ.சி.ஆர்.) வழியாக போக்குவரத்து போலீசாரின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.

ஊரப்பாக்கத்தில்...

* ஆம்னி பஸ்கள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, மெட்ரோ ரெயில்நிலையம், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களை தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்தில் இருந்து ஏற்றிச்சொல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News