செய்திகள்

விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண்

Published On 2019-01-07 19:21 GMT   |   Update On 2019-01-07 19:21 GMT
விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் சமூக ஆர்வலரை, நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு போலீசார் உதவியுடன் மீட்டனர். #Maharashtra #CommitSuicide #Live #SocialMedia
மும்பை:

மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.

அதன்படி நேற்று முன்தினம் தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில், தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையிலேயே அதை குடிக்கவும் செய்தார்.

அப்போது அவரது முகநூல் கணக்கில் இருந்த நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, விருசாலியை மீட்குமாறு வேண்டிக்கொண்டனர்.

அதன்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் விருசாலியின் வீட்டை கண்டறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற பெண் சமூக ஆர்வலர் முகநூல் நேரலை பதிவு காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News