ஆன்மிகம்
பட்டாபிஷேக விழாவில் முருகப்பெருமான் தங்க கிரீடம், நவரத்தின செங்கோலுடன் காட்சி தந்தார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

Published On 2019-12-10 05:56 GMT   |   Update On 2019-12-10 05:56 GMT
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அங்கு பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்கச் சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலையில் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சரவணபொய்கையில் புனிதநீர் எடுத்து அதை கோவில் யானை தெய்வானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் அக்னி வளர்த்து புனித நீர் கொண்டு தங்க கிரீடத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு தங்க கிரீடம் சூட்டி நவரத்தின செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா.... என்று பக்தி கோஷம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து முருகப்பெருமான் தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்தார். திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணி அளவில் மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதேவேளையில் கோவிலுக்குள் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை தீபக்காட்சி நடக்கிறது.
Tags:    

Similar News