உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா?- நாராயணசாமி கேள்வி

Published On 2022-01-13 02:38 GMT   |   Update On 2022-01-13 02:38 GMT
கவர்னரிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி விடுத்தார்.
புதுச்சேரி:

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, வடை விற்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணபாரதி தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ர மணியன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜா குமார், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது பட்டம் பெறுவது போல் உடை அணிந்து வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு அமர்ந்து பஜ்ஜி, வடை விற்பனை செய்தும், செருப்புக்கு பாலீஷ் போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் கூறினார்.

ஆனால் தற்போது பணியிடங்களை நிரப்ப நிதி இல்லை. மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் பணியிடங்களை நிரப்ப முடியும் என்று கூறி வருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் 14 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். கொரோனா வந்த பிறகு 24 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பிரதமர் மோடி கதையும், முதல்-அமைச்சர் ரங்கசாமி கதையும் ஒன்று தான்.

காவலர் பணியிடங்களை நிரப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அப்போது கவர்னர் அனுமதி வழங்கவில்லை. தற்போது நிரப்பப்படுகிறது. காமராஜர் மணிமண்டபத்தை நாங்கள் கட்டி முடித்தோம். தற்போது திறந்து வைக்கின்றனர். 10 ஆயிரம் பேருக்கு பென்சன் வழங்க நாங்கள் ஒப்புதல் வாங்கி வைத்ததை தற்போது வழங்கியுள்ளனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை வாக்குறுதி வழங்கும் அரசாக தான் உள்ளது. அரிசிக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்துதான் மக்களுக்கு மழைநிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மழை நிவாரணம் வழங்கவில்லை. கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கின்றனர்.

பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் முதல்-அமைச்சர் தான். ஆனால் அவர் அந்த கூட்டத்தை கூட்டவில்லை. கவர்னர் தான் கூட்டுகிறார். எனவே புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. ஜனாதிபதி ஆட்சி நடப்பது போல் உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியதால் தான் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது பொங்கல் கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொங்கல் கொண்டாட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் பா.ஜ.க. அமைச்சர்கள் கபடி விளையாடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News