சிறப்புக் கட்டுரைகள்
சக்திவேல் மகான்

சென்னை சித்தர்கள்: சக்திவேல் மகான்- 75

Published On 2022-05-07 12:02 GMT   |   Update On 2022-05-07 12:02 GMT
பெரியபாளையம் பகுதியில் அவர் சுற்றி திரிந்த போதுதான் சில சித்தர்கள் ஆர்வலர்கள் அவரை சித்தர் புருஷராக அடையாளம் கண்டு கொண்டனர். அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்தனர்.


சென்னையில் மிக சமீபத்தில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்கள் செய்து பரிபூரணமானவர் ஸ்ரீசக்திவேல் மகான். சாதாரண மனிதர்களாக பிறந்து சித்தர் நிலைக்கு உயர்ந்தவர்களை விரல்விட்டுதான் என்ன முடியும். அத்தகைய நிலைக்கு உயர்ந்தவர்களில் மிகச்சிலர் பற்றிதான் வெளி உலகுக்கு தெரிய வரும். அப்படி வெளி உலகுக்கு தெரிய வந்தவர்களில் ஒருவராக ஸ்ரீசக்திவேல் மகான் கருதப்படுகிறார்.

இவரது பூர்வீகம் திண்டிவனம்அருகே உள்ள ஒரு கிராமம் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி இவரை பற்றிய எந்த பூர்வீக தகவல்களும் யாருக்கும் தெரியவில்லை. பலதடவை பலரும் வற்புறுத்தி கேட்ட பிறகும் அவர் அதை வெளியிடவில்லை. மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகுதான் அவரது பெயர் சக்திவேல் என்பது தெரிய வந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக அவர் சென்னை புறநகர் பகுதிகளில் சாலையோரங்களில் சுற்றி திரிந்தார். அவரை பார்த்த அனைவருமே ஏதோ பித்தர் என்றுதான் நினைத்தனர்.

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், காரனோடை, புழல் ஏரி பகுதிகளில் அவர் சுற்றி திரிந்தார். ஊத்துக்கோட்டை பஸ் நிலைய வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். யாரையாவது பார்த்து திடீரென ஏதாவது சொல்வார். அது அவரது வாழ்வில் நடந்த ஒன்றாக இருக்கும். அல்லது நடக்க போவதாக இருக்கும். இப்படித்தான் சக்திவேல் மகான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட தொடங்கினார்.

பெரியபாளையம் பகுதியில் அவர் சுற்றி திரிந்த போதுதான் சில சித்தர்கள் ஆர்வலர்கள் அவரை சித்தர் புருஷராக அடையாளம் கண்டு கொண்டனர். அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்தனர்.

ஆனால் சக்திவேல் மகான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்கியதே இல்லை. இடம்விட்டு இடம் சென்று கொண்டே இருப்பார். சிறிது நாட்கள் புழல் ஏரிக்கரையில் வசித்து வந்தார்.

அதன்பிறகு பெரம்பூர் லட்சியம்மன் கோவில் அருகே தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அங்கு சுமார் 9 ஆண்டுகள் இருந்தார். அந்த சமயத்தில்தான் ஏராளமானோர் அவரை மகான் என்று புரிந்து கொண்டனர். அவரை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 2020 ம் ஆண்டு திடீரென பெரம்பூரில் இருந்து புறப்பட்ட அவர் காரனோடைக்கு சென்று விட்டார். அங்கு கல்லுக்கட்டி சித்தர் ஜீவாலயம் அருகே போய் அமர்ந்து கொண்டார்.

கடைசி 6 மாதங்கள் அவர் அங்குதான் இருந்தார். அந்த சமயத்தில் தினமும் அவரை தேடி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஆனால் திடீரென அவர் ஆத்மாவை பிரித்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ந் தேதி அவர் பரிபூரணமானார். 1.5.2020ம் தேதியன்று அவர் ஜீவசமாதி வைக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா அலை மிக தீவிரமாக பரவி இருந்தது. என்றாலும் சக்திவேல் மகான் பரிபூரணம் அடைந்த தகவல் அறிந்ததும் சுமார் 400 பேர் திரண்டுவிட்டனர்.

அதுபோல அவரது ஜீவசமாதியில் 48 நாள் மண்டல பூஜைகள் நடந்த போதும், கொரோனாவுக்கு பயப்படாமல் தினமும் சுமார் 400 பேர் வந்து வழிபட்டு சென்றனர்.

சக்திவேல் மகான் தன்னை சித்தர் என்று அழைப்பதற்கு ஒருபோதும் அனுமதித்தது இல்லை. சித்தர் என்று சொன்னால் சிரிப்பார். மற்றபடி பெரும்பாலான நேரங்களில் வயலில் வேர்கடலை விதைப்பது போன்று கைகளை சைகை செய்து கொண்டே இருப்பார். அந்த சமயத்தில் அவரது வாய் ஏதோ முணுமுணுக்கும். அப்படி அவர் செய்யும் போது ஏதோ ஒரு அற்புதம் செய்கிறார் என்று அர்த்தம் என்கிறார்கள்.

மற்றபடி அவர் சித்தர்களை போல பரிபாசையில் ஒருபோதும் பேசியதே கிடையாது. எதுவாக இருந்தாலும் தெளிவாக, நேரடியாக சொல்லும் வழக்கத்தை வைத்து இருந்தார்.

ஒருவரை பார்த்ததும் என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறார் என்பதை பளிச்சென சொல்லிவிடுவார். இதுதான் நிறைய பேரை ஆச்சரியப்பட வைத்தது.

காரனோடை பள்ளிமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏக்கத்தில் இருந்தார். ஒருதடவை அவர் சக்திவேல் மகானை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது சக்திவேல் மகான் சிரித்துக்கொண்டே அங்கிருந்த வாழைப்பழ தாரில் இருந்து இரட்டை பழங்களை பிரித்து எடுத்து கொடுத்தார். அந்த பெண்ணுக்கு அடுத்த ஆண்டு இரட்டை குழந்தை பிறந்தது.

இதேபோன்று பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த தடவை உள்ளாட்சி தேர்தல் நடந்த போது போட்டியிட்டார். அவர் சக்திவேல் மகானை சந்தித்து ஆசி பெற சென்றார். அப்போது சக்திவேல் மகான் குறிப்பிட்ட ஒரு நம்பரை சொல்லி இத்தனை ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாய் என்று வாழ்த்தினார். அவர் சொன்னது போலவே அந்த நபர் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

சில சமயங்களில் அவர் சிலரது கனவிலும் சென்று தன்னை நோக்கி வருமாறு வரவழைத்துள்ளார். சமீபத்தில் 4 பேர் அப்படி சக்திவேல் மகானின் ஜீவசமாதியை தேடி கொண்டு வந்தனர். அதில் மணலியை சேர்ந்த ஆட்டோ டிரைவரும் ஒருவர். அந்த ஆட்டோ டிரைவரின் கனவில் தோன்றிய சக்திவேல் மகான் தனது இருப்பிடத்துக்கு எந்த பாதை வழியாக வர வேண்டும் என்பதை கூட சொன்னாராம்.

இப்படி அடுக்கடுக்கான அற்புதங்களை ஓசையின்றி செய்துள்ள சக்திவேல் மகானின் ஜீவ சமாதியில் ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜைகளில் திருவள்ளூர், ஆவடி பகுதிகளை சேர்ந்தவர்கள் திரளானவர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த முதலாமாண்டு குரு பூஜையில் சுமார் 900 பேர் பங்கேற்றனர். இந்தநிலையில் நாளை சக்திவேல் மகானின் 2ம் ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது. இந்த குரு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

நாளை காலை 8 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது. 9 மணிக்கு ஹோமங்கள் நடத்தப்பட்டு, அபிஷேகம் செய்யப்படும். அதன்பிறகு கல்லுக்கட்டி சித்தர், பரஞ்சோதி சித்தரின் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடுவார்கள். 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடத்தப்படும். அதன்பிறகு அன்னதானம் வழங்க திட்டமிட்டு உள்ளனர்.

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதிகளில் இருந்து வருபவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் காரனோடை பகுதியில் இருந்து இலவச பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சக்திவேல் மகானின் ஜீவசமாதி கல்லுக்கட்டி சித்தரின் ஜீவ சமாதிக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் வாழ்நாளில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதே இல்லை. என்றாலும் அவர்களுக்குள் புரிதல் இருந்தது.

கல்லுக்கட்டி சித்தர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் நல்லழகு பாலிடெக்னிக் எதிரே உள்ள பகுதியில்தான் சக்திவேல் மகான் சுற்றி கொண்டிருப்பார். அப்போது கல்லுக்கட்டி சித்தர் சில மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரை சந்திக்க பக்தர்கள் சென்றால் என்னை மட்டும் பார்த்தால் போதாது ஏரிக்கரையில் ஒருவன் இருக்கிறான். அவனையும் பார்த்து விட்டு செல்லுங்கள் என்று சொல்லுவாராம். சிலரிடம் போகும் வழியில் ஒருத்தன் இருப்பான். அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு போங்கள் என்று சொல்லுவாராம்.

அந்த அளவுக்கு சக்திவேல் மகானை பற்றி இருந்த இடத்தில் இருந்து கொண்டே கல்லுக்கட்டி சித்தர் பல தடவை தன்னை தேடி வருபவர்களிடம் சொல்லி இருக்கிறார். இதன்மூலம் அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஓசையில்லாத தொடர்பை நினைத்து பக்தர்கள் வியந்ததுண்டு.

சித்தர்களிடம் பெரும்பாலும் நாய்கள் சுற்றி சுற்றி வந்தபடி இருக்கும். சக்திவேல் மகானிடமும் ஒரு நாய் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. இப்போதும் அந்த நாய் உயிரோடு இருக்கிறது. தினமும் அது சக்திவேல் மகானின் ஜீவ சமாதி ஆலயம் எதிரிலேயே படுத்துக்கிடப்பதாக சொல்கிறார்கள்.

சக்திவேல் மகான் உயிரோடு இருந்த காலத்தில் தன்னை நாடி வருபவர்களின் தோஷங்களை வித்தியாசமான முறையில் தீர்த்ததுண்டு. ஒவ்வொரு சித்தருக்கும் தோஷங்களை நீக்குவதில் ஒவ்வொரு விதமான பழக்கம் இருக்கும். அந்த வகையில் சக்திவேல் மகான் யாரிடமாவது உணவு கேட்டால் அவர்களது தோஷத்தை நீக்க போகிறார் என்று அர்த்தமாம்.

சிலரை பார்த்ததும் அடுத்த தடவை வரும்போது தனக்கு இனிப்பு வாங்கிவா என்று சொல்வாராம். சிலரிடம் மிக்சர், ரொட்டி வாங்கி வர கூறுவதுண்டு.

சிலரிடம் அவர் அசைவ உணவை கூட கேட்டு பெற்றதுண்டாம். இதை கருத்தில் கொண்டு இப்போதும் அவரது ஜீவசமாதியில் அவரது பக்தர்கள் உணவு பொருட்கள் வைத்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சக்திவேல் மகானின் 2ம்ஆண்டு குருபூஜையில் பங்கேற்றால் பலன் பெறலாம் என்று அவரது ஜீவாலய பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

Tags:    

Similar News