செய்திகள்
ரெயில்

முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதி

Published On 2021-11-07 07:34 GMT   |   Update On 2021-11-07 07:34 GMT
பயணிகள் முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த வசதியை தெற்கு ரெயில்வே கொண்டு வந்துள்ளது.

சென்னை:

ரெயில்களில் பயணம் செய்ய பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். டிக்கெட் கவுண்டருக்கு சென்றும், ஆன்லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணம் செய்வோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி ரெயில் நிலையத்திலோ வேறு எந்த பகுதியிலோ இருந்து கொண்டு டிக்கெட்டுகளை பெற முடியும். ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊழியர்கள் நேரடியாக சென்று கையடக்க சிறிய கருவி மூலம் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவார்கள்.

ரெயில் நிலையம் இல்லாத வேறு பகுதிகளிலும் இந்த கருவி மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற முடியும். பயணிகள் முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த வசதியை தெற்கு ரெயில்வே கொண்டு வந்துள்ளது.

இதற்கான சோதனை முறையை தெற்கு ரெயில்வே தொடங்கி உள்ளது. ரெயில்வே போர்டு சேர்மன் சுனித் சர்மா தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் இந்த சோதனையை நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, தொலைவான பகுதியில் இருந்தும், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்திலும் கையடக்க கருவியை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படும். இதை பயன்படுத்துவதற்கு முன்பு ரெயில்வே வாரியத்திடம் ஒப்புதல் பெறப்படும் என்றார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது

Tags:    

Similar News