ஆன்மிகம்
யாகசாலை பூஜைக்காக பெத்தண்ணன் கலையரங்கில் குண்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.

பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்கள் அமைப்பு

Published On 2020-01-10 06:11 GMT   |   Update On 2020-01-10 06:11 GMT
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்கள் அமைக்கும் பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகைக்குள் திருப்பணிகளை தொல்லியல் துறையினர் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் புனரமைப்பு, புல்தரை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 2-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. தற்போது பெரியகோவில் விமான கோபுரத்துக்கும், நந்தி மண்டபத்துக்கும் இடைபட்ட பகுதியில் உள்ள தரைதளத்தில் சிதிலமடைந்த செங்கற்கள் அகற்றப்பட்டு புதிதாக செங்கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் தெற்கு திருச்சுற்று மண்டபத்தின் சுவரில் படிந்த பாசிகள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெரியகோவில் நுழைவுவாயிலான மாராட்டா பகுதியிலும் சிதிலமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்காக கான்கிரீட் போடப்பட்டு அதில் இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு தகரத்தால் கொட்டகை போடப்பட்டுள்ளது.

இதை சுற்றிலும் செங்கற் களால் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளே மண் கொட்டப்பட்டு திடப்படுத்தப்பட்டு வருகிறது. 3 பிரிவாக பிரித்து இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியில் தற்போது குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைக்காக மொத்தம் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்படுகிறது.

பெரியகோவிலில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் சுதைவேலைப்பாடு, சுத்தம் செய்வது உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை வருகிற பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொல்லியல் துறையினர் பணிகளை முடித்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News